செம்பவாங் காட்டுப்பகுதியைப் பாதுகாக்க நடவடிக்கை

செம்பவாங் காட்டுப்பகுதியைப் பாதுகாக்க நடவடிக்கை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Jun 2026 - 9:02 pm

2 mins read

செம்பவாங் வட்டாரத்தின் இயற்கைப் பகுதியைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய செம்பவாங் வீடமைப்பு வளர்ச்சிக்கழகக் குடியிருப்புத் திட்டத்தின் பரப்பளவு குறைக்கப்படவுள்ளது. 

நன்னீர்ச் சதுப்பு நிலக் காடுகளின் எஞ்சியுள்ள பகுதிகளிலுள்ள தாவரங்களையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பது இதன் நோக்கம்.

தாவரங்கள் நிறைந்த இந்தப் பகுதியின் கிட்டத்தட்ட 30 விழுக்காட்டு நிலம் எந்தவோர் உடனடி மேம்பாட்டுத் திட்டங்களும் இன்றி அப்படியே விடப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வியாழக்கிழமை (ஜூன் 25) தெரிவித்தது.

இதன் சுற்றுச்சூழல் மதிப்பைக் கருத்தில்கொண்டு, கிட்டத்தட்ட எட்டுக் காற்பந்துத் திடல்களுக்கு இணையான, ஏறக்குறைய 6 ஹெக்டர் காடு, புல்வெளி, குறுங்காடுகள் கொண்ட பகுதி இதற்காக ஒதுக்கப்படுகிறது.

கடந்த வாரம் அந்த அமைப்பு வெளியிட்ட இரண்டு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கைகளில் ஒன்றில், செம்பவாங் சுற்றுப்புறத்திற்கான திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

எதிர்கால தெங்கா நகர மையத்திற்காகத் தெங்கா காட்டின் சில பகுதிகளை அழிப்பதன் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் விளைவுகளை இரண்டாவது அறிக்கை விவரிக்கிறது.

அறிக்கையின்படி, கிட்டத்தட்ட 21 ஹெக்டர் பரப்பளவிலான அந்தப் பகுதியின் மீதமுள்ள நிலம், 2028 முதல் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டில் இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ‘ஏகாம்’ (Aecom) பொறியியல் ஆலோசனை நிறுவனம் தயாரித்த செம்பவாங் அறிக்கையில், மேம்பாட்டுப் பரப்பளவைக் குறைக்கப் பரிந்துரைக்கப்பட்டது.

முற்காலத்தில் சதுப்புநிலமாக இருந்த அந்தப் பகுதி, பின்னர் செம்பவாங் கடற்படைத் தளம் உள்ளிட்ட வசதிகளுக்காக மேம்படுத்தப்பட்டது. 

1970களுக்குப் பிறகு கடற்படைத் தளம் மூடப்பட்டதைத் தொடர்ந்து அங்கு இயற்கைக்கு மீண்டும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பு சிலேத்தார் நீர்த்தேக்கத்தின் ஓரத்தில் பல்லாண்டுகளாகக் காணப்பட்ட நன்னீர்ச் சதுப்பு நிலக் காடுகளில் வழக்கமாக வளரும் தாவரங்கள் அங்கு மீண்டும் முளைத்து வளரத் தொடங்கின.

தாவரங்களைப் பாதுகாப்பதுடன் அங்குக் கண்டறியப்பட்டுள்ள வனவிலங்குகள் கடந்துசெல்லக்கூடிய பாதை அமைக்கப்படும் என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்