இவ்வாண்டின் முதல் காலாண்டில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக, தனியார் வீட்டு விலை உயர்வு மிதமடைந்துள்ளது.
இந்தத் தகவல் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) வெளியிடப்பட்டது.
வீட்டு விலை மிதமடையும் அறிகுறியாக இது கருதப்படுகிறது.
விற்பனைக்கு விடப்படும் வீவக, தனியார் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் விலை உயர்வு மிதமடைந்திருப்பதாகவும் தனியார் வீடுகள் விற்பனை ஒட்டுமொத்த அளவில் குறைந்திருப்பதாகவும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.
வீவக மறுவிற்பனை விலைக் குறியீடு 1.5 விழுக்காடு ஏற்றம் கண்டது.
2024ஆம் ஆண்டில் இறுதிக் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 2.6 விழுக்காடு குறைவு.
இதுவே கடந்த ஐந்து காலாண்டுகளில் ஆகக் குறைவானது.
தேவைக்கு ஏற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடுகளின் விற்பனை தொடர்வதாலும் எஞ்சியிருக்கும் வீடுகள் விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் முன் இல்லாத அளவுக்கு நடந்ததாலும் இந்நிலை ஏற்பட்டது என்று அமைச்சர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தனியார் வீடுகளைப் பொறுத்தவரை, இவ்வாண்டு முதல் காலாண்டில் தனியார் குடியிருப்பு விலைக் குறியீடு 0.6 விழுக்காடு உயர்ந்தது.
கடந்த ஆண்டு இறுதிக் காலாண்டில் இக்குறியீடு 2.3 விழுக்காடு ஏற்றம் கண்டது.
தரை வீடுகள் இல்லாத தனியார் அடுக்குமாடி வீடுகளில் விலை உயர்வு மிதமடைந்ததே இதற்குக் காரணம்.
காலாண்டு அடிப்படையில் ஒட்டுமொத்த விற்பனை 15 விழுக்காடு குறைந்தது.
“வீடு வாங்குவோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வீடுகள் தொடர்ந்து விற்பனைக்கு விடப்படும். இதன் மூலம் சொத்துச் சந்தை மேலும் நிலைப்படுத்தப்படும்,” என்றார் திரு லீ.
“2025ஆம் ஆண்டுக்கும் 2027ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 50,000க்கும் அதிகமான பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்படும். அவற்றில் ஏறத்தாழ 12,000 வீடுகளுக்கான காத்திருப்பு நேரம் குறைவானதாக இருக்கும். அவற்றுக்கான காத்திருப்பு நேரம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள். பிப்ரவரி மாதத்தில் இதற்கு முன் இல்லாத அளவில் ஆக அதிகமாக ஏற்றாழ 5,500 எஞ்சியிருக்கும் வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன,” என்று அமைச்சர் லீ தெரிவித்தார்.

