$6.775 பில்லியன் பற்றாக்குறையைப் பதிவு செய்த வீவக

2 mins read
c0a328ec-b353-44f2-8a43-0382918235f7
கட்டப்பட்டு வரும் வீடுகள் தொடர்பாக எதிர்பார்க்கப்படும் இழப்புத் தொகை, மத்திய சேமநிதி வீடமைப்பு மானியங்களை வழங்குதல், இல்ல உரிமைத்துவத் திட்டத்தின்கீழ் மானியம் வழங்கப்பட்ட வீடுகளுக்கான விற்பனையில் ஏற்பட்ட இழப்பு ஆகியவை பற்றாக்குறையின் பெரும் பகுதிக்கு ($6.225 பில்லியன்) காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2023 நிதி ஆண்டில் (2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை) வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) $6.775 பில்லியன் பற்றாக்குறையைப் பதிவு செய்தது.

கட்டுமானச் செலவுகள் அதிகரிப்பு, தேவைக்கு ஏற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடுகள் தொடர்ச்சியாக அதிக அளவில் கட்டப்பட்டது ஆகியவை இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தப் பற்றாக்குறை ஏறத்தாழ 26 விழுக்காடு அதிகம்.

2022 நிதி ஆண்டில் $5.38 பில்லியன் பற்றாக்குறை பதிவானது.

இத்தகவல்கள் நவம்பர் 7ஆம் தேதியன்று வீவக வெளியிட்ட ஆண்டறிக்கை வாயிலாகத் தெரியவந்துள்ளன.

கட்டப்பட்டு வரும் வீடுகள் தொடர்பாக எதிர்பார்க்கப்படும் இழப்புத் தொகை, மத்திய சேமநிதி வீடமைப்பு மானியங்களை வழங்குதல், இல்ல உரிமைத்துவத் திட்டத்தின்கீழ் மானியம் வழங்கப்பட்ட வீடுகளுக்கான விற்பனையில் ஏற்பட்ட இழப்பு ஆகியவை பற்றாக்குறையின் பெரும் பகுதிக்கு ($6.225 பில்லியன்) காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 நிதி ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் ஏற்பட்ட இழப்பு 33 விழுக்காடு அதிகம்.

இத்திட்டத்தின்கீழ் 2022 நிதி ஆண்டில் $4.68 பில்லியன் பற்றாக்குறை பதிவானது.

தொடர்புடைய செய்திகள்

செலவுகள் அதிகரித்து வரும்போதிலும் பொது வீடமைப்பைக் கட்டுப்படியான விலையில் வைத்திருக்க வீவக கொண்டிருக்கும் கடப்பாட்டை இல்ல உரிமைத்துவத் திட்டத்தின்கீழ் ஏற்பட்டுள்ள இழப்பு காட்டுவதாக வீவகவின் தலைமை நிர்வாகி டான் மெங் டுயி தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஏறத்தாழ 22,700 வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளை வீவக தொடங்கியது.

இது அதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 விழுக்காடு அதிகம்.

2023 நிதி ஆண்டில் 16,844 வீடுகள் விற்கப்பட்டன.

இது அதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.8 விழுக்காடு குறைவு.

இதற்கிடையே, 2023 ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வீவக மறுவிற்பனை வீடுகள், எக்சகியூட்டிவ் கொண்டோமினியம் ஆகியவற்றை வாங்கியோருக்கு மொத்தம் $999 மில்லியன் மத்திய சேமநிதி மானியங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வீவக மறுவிற்பனை வீடுகளை வாங்க தகுதி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் மத்திய சேமநிதி மானியத் தொகை 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து $30,000 அதிகரித்ததை வீவக சுட்டியது.

குறிப்புச் சொற்கள்