வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) குடியிருப்பு வட்டாரங்களில் முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் உள்ள மறுவிற்பனை வீட்டு விலைகள் 2.3 விழுக்காடு அதிகரித்துள்ளன. முதிர்ச்சியடையாத பேட்டைகளில் அந்த உயர்வு ஒரு விழுக்காடாக உள்ளது.
இவ்வாண்டு செப்டம்பரில் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை குறைந்தாலும் வீட்டு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை எஸ்ஆர்எக்ஸ், ‘99.co’ ஆகிய இரண்டு சொத்து இணையத் தளங்களின் தரவுகள் காட்டுகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து செப்டம்பர் வரை மறுவிற்பனை வீட்டு விலை 1.8 விழுக்காடு கூடியது. ஆனால், விற்பனையான வீடுகளின் எண்ணிக்கை 14.9 விழுக்காட்டுக்குச் சரிந்தது என்று திங்கட்கிழமை (அக்டோபர் 7) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் இருந்த விலை, செப்டம்பரிலும் தொடர்ந்தது. குறைவான வீடுகள் விற்பனைக்கு இருந்ததால் தேவை அதிகரித்து விலை கூடியது என்று ‘99.co’ இணையத் தளத்தின் தரவு பகுப்பாய்வாளர் ஜோயல் லிம் கருதுகிறார்.
எஸ்ஆர்எக்ஸ் தரவுகளைச் சுட்டிக்காட்டிய புராப்நெக்ஸ் ரியால்டியின் ஆய்வு, உள்ளடக்கப் பிரிவின் தலைவரான வோங் சியு யிங், அக்டோபர் 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு மாதாந்தர விலை உயர்வு தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வீவக மறுவிற்பனை வீடுகளுக்கான தேவை தொடர்ந்து நீடிக்கும். தனியார் அடுக்குமாடி வீடுகளின் அளவு, விலையை ஒப்பிடும்போது வீவக வீடுகளை வாங்க சிலர் விரும்புவார்கள் என்று வோங் கூறினார். இதே போன்று லிம்மும் கருத்து தெரிவித்துள்ளார்.