வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை தொடர்ந்து இரண்டாவது காலாண்டாகச் சரிந்துள்ளது.
சென்ற ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் குறைவான வீடுகளே கைமாறின.
கழகம் புதன்கிழமை (ஜூலை 1) வெளியிட்ட முன்னோடி மதிப்பீட்டு அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் காலாண்டில் கழக மறுவிற்பனை வீடுகளின் விலை 0.3 விழுக்காடு குறைந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, முதல் காலாண்டில் அது 0.1 விழுக்காடு குறைந்தது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் முதல் முறையாகக் கழக மறுவிற்பனை வீட்டு விலை அவ்வாறு குறைந்தது.
இரண்டாம் காலாண்டில் 6,268 வீடுகள் மறுவிற்பனையாயின. சென்ற ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்புநோக்க இது 10.2 விழுக்காடு குறைவு.
இவ்வேளையில், தனியார் வீட்டு விலை இரண்டாம் காலாண்டில் 0.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. முந்தைய காலாண்டில் அது 0.9 விழுக்காடாகப் பதிவானது.
மேலும், இரண்டாம் காலாண்டில் 5,420 தனியார் வீடுகள் விற்பனையாயின. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கையில் மாற்றமில்லை.
இவ்வாண்டின் பிற்பாதியில் 4,745 தனியார் வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அக்டோபர் மாதம் ஏறத்தாழ 7,960 புதிய வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்று வீவக கூறியது. பிடோக், கேலாங், செம்பவாங், தெங்கா, தோ பாயோ, ஈசூன் ஆகிய வட்டாரங்களில் அவை அமைந்திருக்கும்.
தோ பாயோவில் சமூகப் பராமரிப்பு அடுக்குமாடி வீடுகளும் விற்பனைக்கு வரும். இந்த வீடுகளில் சக்கர நாற்காலி பயன்படுத்துவோர்க்கு உகந்த குளியலறை உள்ளிட்ட முதியோர்க்கு ஏற்ற சுகாதார, சமூசப் பராமரிப்பு வசதிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
அக்டோபரில் விற்பனைக்கு விடப்படும் வீடுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அதற்கான தகுதிக் கடிதத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதைக் கழகம் நினைவுறுத்தியது.
வீடு வாங்கும்போதும் அதற்கான கடன் வாங்கும்போதும் குடும்பங்கள் பொருளியல் நிச்சயமற்றதன்மையைக் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என்று கழகமும் ஆணையமும் அறிவுறுத்தியுள்ளன.
“அரசாங்கம் தொடர்ந்து சொத்துச் சந்தையை அணுக்கமாகக் கண்காணித்து, அதன் கொள்கைகளில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்யும்,” என்றும் வீவக கூறியது.

