வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை இந்த ஆண்டின் (2025) முதல் காலாண்டில் 1.6 விழுக்காடு உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) வெளியான கழகத்தின் புள்ளிவிவரங்கள் இதைக் காட்டுகின்றன.
சென்ற ஆண்டின் இறுதிக் காலாண்டில், காலாண்டு அடிப்படையிலான மறுவிற்பனை வீடுகளின் விலை உயர்வு 2.6 விழுக்காடாகப் பதிவானது. சென்ற ஆண்டு முழுவதற்குமான சராசரிக் காலாண்டு விலை உயர்வு 2.3 விழுக்காடாக இருந்தது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கைமாறிய மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை 2.6 விழுக்காடு உயர்ந்து 6, 590ஆகப் பதிவானது. சென்ற ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்புநோக்க இந்த விகிதம் 6.8 விழுக்காடு குறைவு.
கடந்த பிப்ரவரி மாதம் ஆகப் பெரிய எண்ணிக்கையில் எஞ்சிய வீடுகளின் விற்பனை அறிவிக்கப்பட்டதால், வீடு வாங்குவோருக்குக் கூடுதல் தெரிவுகள் கிடைத்தன என்று கூறிய ஆய்வாளர்கள், இதனால் மறுவிற்பனை வீட்டு விலை அதிகம் உயரவில்லை என்கின்றனர்.
ஜூலை மாதம் ஏழு வட்டாரங்களில் ஏறக்குறைய 5,400 ‘பிடிஓ’ வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்று கழகம் கூறியது. 2027க்குள் 50,000க்கும் மேற்பட்ட ‘பிடிஓ’ வீடுகளை விற்பனைக்கு விடவிருப்பதாகவும் அவற்றில் 19,600 வீடுகள் இந்த ஆண்டு விற்பனைக்கு வரவிருப்பதாகவும் அது குறிப்பிட்டது.
கூடுதலான ‘பிடிஓ’ வீடுகள் விற்பனைக்கு வரும்போது மறுவிற்பனை வீடுகளுக்கான தேவை குறையக்கூடும் என்று சொத்துச் சந்தை ஆய்வாளர்கள் கூறினர். எஞ்சிய வீட்டு விற்பனைத் திட்டத்தின்கீழ் கூடுதலான வீடுகள் விற்கப்படுவதும் மறுவிற்பனை வீடுகளுக்கான தேவை குறைவதற்கு ஒரு காரணம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
இவ்வேளையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தனியார் வீட்டு விலை 0.8 விழுக்காடு உயர்ந்ததாக நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டின் இறுதிக் காலாண்டில் அந்த விகிதம் 2.3 விழுக்காடாகப் பதிவாகியிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
2024ன் இறுதிக் காலாண்டில் சரிந்த தரை வீடுகளின் விலை 2025ன் முதல் காலாண்டில் 0.4 விழுக்காடு உயர்ந்தது. தனியார் அடுக்குமாடி வீடுகளின் விலை முதல் காலாண்டில் 1 விழுக்காடு உயர்ந்தது. முந்தைய காலாண்டில் அது 3 விழுக்காடாக இருந்தது.

