வீடு வாங்குவோர் முக்கியமாகக் கவனத்தில் கொள்ளும் அம்சங்களில் ஒன்று ரயில் நிலையம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பது.
அதற்கு ஒருவர் எவ்வளவு தொகை கொடுக்கிறார் என்பது வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வட்டாரத்தைப் பொறுத்தது.
அதன் தொடர்பில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம், சொத்து இணையவாசல்களான 99.கோ, எஸ்ஆர்எக்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வொன்றை மேற்கொண்டது.
அதில் 26 வீவக வட்டாரங்களில் வீட்டு விலைகள் ஆராயப்பட்டன. அதன்படி 26 வட்டாரங்களில் 15ல், எல்ஆர்டி அல்லது எம்ஆர்டி நிலையங்களிலிருந்து வீடு அமைந்திருக்கும் தொலைவு அதிகரிக்க அதிகரிக்க வீட்டின் விலை பொதுவாகக் குறைந்தது.
இத்தகைய நிலை மிகவும் வலுவாக இருக்கும் 10 வட்டாரங்கள்: காலாங்/வாம்போ, புக்கிட் மேரா, பாசிர் ரிஸ், ஹவ்காங், கேலாங், பிடோக், சிராங்கூன், பொங்கோல், உட்லண்ட்ஸ், ஜூரோங் வெஸ்ட்.
ஐந்து வட்டாரங்களில் இந்தத் தொடர்பு நிலை பலவீனமாகக் காணப்பட்டது. அங் மோ கியோ, பீஷான், சுவா சூ காங், குவீன்ஸ்டவுன், ஜூரோங் ஈஸ்ட் ஆகியவையே அவை.
ரயில் நிலையத்திலிருந்து வீட்டின் தொலைவு கூட கூட, விலை அதிகம் குறைந்தது காலாங்/வாம்போ வட்டாரத்தில்தான். அங்கு அருகில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து 100 மீட்டர் தள்ளிப்போக தள்ளிப்போக வீட்டின் இடைநிலை விலை சதுர அடிக்குக் கிட்டத்தட்ட $35.40 குறைந்தது.
அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் புக்கிட் மேராவும் பாசிர் ரிசும் வந்தன. அங்கு வீட்டின் இடைநிலை விலை சதுர அடிக்கு முறையே ஏறக்குறைய $35.12ம் $35.10ம் குறைந்தன.
தொடர்புடைய செய்திகள்
நிலப் போக்குவரத்து ஆணையம் ரயில் கட்டமைப்பை விரிவுபடுத்தி வருகிறது. அதன்படி 2030களில் இங்குள்ள 80 விழுக்காட்டு வீடுகளில் வசிப்போர் 10 நிமிடத்திற்குள் ரயில் நிலையத்தை அடைந்துவிட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற ஆண்டு (2025) 26 வட்டாரங்களில் கைமாறிய ஏறத்தாழ 24,000 வீவக மறுவிற்பனை வீடுகளை ஆய்வு ஆராய்ந்தது.
அதில் மூவறை, நாலறை, ஐந்தறை, எக்ஸிகியூட்டிவ் வீடுகள் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
சிங்கப்பூரில் 27 வீவக வட்டாரங்கள் உள்ளன. அவற்றில் 26 மட்டுமே ஆய்வில் இடம்பெற்றன. சிங்கப்பூரின் புதிய வட்டாரமான தெங்கா, அதில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அங்குள்ள வீவக வீடுகள் இன்னும் குறைந்தபட்சத் தங்கும் காலத்தை எட்டவில்லை.
ரயில் நிலையங்களுக்கு அருகே பொதுவாகக் கடைத்தொகுதிகளும் பேருந்துச் சந்திப்புகளும் வட்டார நடுவங்களும் இருக்கும். அதனால் பல வட்டாரங்களில் ரயில் நிலையம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பது விலையில் அதிக மாற்றத்தை ஏற்படுத்தக் காரணமாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது.
ஆனால் இதற்கு விதிவிலக்கும் உண்டு. 11 வட்டாரங்களில் இந்தப் போக்கு இல்லை. புக்கிட் பாத்தோக், புக்கிட் பாஞ்சாங், புக்கிட் தீமா, மத்திய வட்டாரம், கிளமெண்டி, மரின் பரேட், செம்பவாங், செங்காங், தெம்பனிஸ், தோ பாயோ, ஈசூன் ஆகியவையே அந்த வட்டாரங்கள்.

