விற்பனையில் எஞ்சிய 5,500 வீடுகளை (SBF) வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) 2025 பிப்ரவரியில் மீண்டும் விற்பனைக்கு விட உள்ளது.
இந்த அளவுக்கு அதிகமான எஞ்சிய வீடுகள் விற்பனைக்கு விடப்படுவது இதுவே முதல்முறை.
அத்தகைய வீடுகளில் 10ல் நான்கு ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டுவிட்டன.
அவை தவிர, மற்ற வீடுகள் 2025 முதல் 2028க்குள் படிப்படியாகக் கட்டி முடிக்கப்படும் என்று வீவக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) தெரிவித்தது.
எஞ்சிய வீடுகளுடன் பிடிஓ வீடுகளையும்ம் சேர்த்து 10,000க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் 2025 பிப்ரவரியில் விற்பனைக்கு வரும். காலாங்-வாம்போ, குவீன்ஸ்டவுன், உட்லண்ட்ஸ், ஈசூன் வட்டாரங்களில் ஏறத்தாழ 5,000 பிடிஓ வீடுகளின் விற்பனை அப்போது தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 2.7 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளதாக வீவக வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இது அதற்கு முந்திய காலாண்டைக் காட்டிலும் வேகமான விலை ஏற்றம்.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில் அந்த விகிதம் 2.3 விழுக்காடாகப் பதிவானது.
அதேபோல, செப்டம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் மறுவிற்பனைச் சந்தையில் அதிக வீடுகள் விற்பனை ஆயின.
தொடர்புடைய செய்திகள்
அந்த மூன்று மாதங்களில் மொத்தம் 8,142 வீடுகள் கைமாறின. அதற்கு முந்திய காலாண்டில் விற்பனை ஆன 7,352 வீடுகளைக் காட்டிலும் இது 10.7 விழுக்காடு அதிகம்.
மறுவிற்பனைச் சந்தையில் வலுவான தேவை, மறுவிற்பனைச் சந்தையில் நிலவும் இறுக்கமான நிலவரம் ஆகியன காரணமாக விலைகளும் விற்பனையும் அதிகரித்ததாக வீவக தெரிவித்து உள்ளது.
இருப்பினும், பெரும்பாலான வீடுகள் $1 மில்லியனுக்கும் மிகக் குறைவான விலையில் விற்கப்பட்டன.
ஒட்டுமொத்த மறுவிற்பனைப் பரிவர்த்தனைகளில் ஒரு சிறிய பகுதியே $1 மில்லியன் மற்றும் அதற்கும் அதிகமான விலைக்கு விற்கப்பட்டதாக வீவக குறிப்பிட்டது.
விலைகளும் விற்பனையும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அறிமுகம் கண்ட புதிய கட்டுப்பாட்டைப் பெரிதளவில் பிரதிபலித்ததாக அது தெரிவித்தது.
மதிப்பு மீதான கடனுக்கான வரம்பு 80 விழுக்காட்டில் இருந்து 75 விழுக்காட்டுக்குக் குறைக்கப்பட்டதே அந்தக் கட்டுப்பாடு.

