வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலைகள் சென்ற ஆண்டு (2025) 2.9 விழுக்காடு கூடின. அதற்கு முந்திய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது குறைவு. 2024ல் மறுவிற்பனை வீடுகளின் விலையேற்றம் 9.7 விழுக்காடாக இருந்தது.
கடந்த ஆண்டின் விலையேற்றம், 2019க்குப் பிறகு ஆக மெதுவான வளர்ச்சி என்று வீவக வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
2020ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்குப் பிறகு, முதன்முறையாகச் சென்ற ஆண்டின் கடைசிக் காலாண்டில் வீவக மறுவிற்பனை வீடுகளின் விலைகள் மாற்றமின்றி இருந்தன.
வீவக மறுவிற்பனை வீடுகளின் விலைகள், 2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாகத் தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகளின் கட்டுமானப் பணிகள் அப்போது மெதுவடைந்திருந்தன. சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட வீவக வீடுகளின் எண்ணிக்கையையும் அது பாதித்தது.
மறுவிற்பனை வீடுகளின் விலையேற்றம் தொடர்ந்து நான்கு காலாண்டுகளாகக் குறைந்துவந்த நிலையில், போன ஆண்டின் இறுதிக் காலாண்டின் தரவுகள் வெளியிடப்பட்டிருப்பதாக வீவக குறிப்பிட்டது. 2025 இரண்டாம், மூன்றாம், நான்காம் காலாண்டுகளில் விலையேற்றம் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தது.
இதற்கு முன்னர் வீவக இம்மாதம் மூன்றாம் தேதி வெளியிட்ட அறிக்கையில், சென்ற ஆண்டின் கடைசிக் காலாண்டில் குறைவான மறுவிற்பனை வீடுகளே விற்பனையானது தெரியவந்தது. மூன்றாம் காலாண்டில் 7,221 வீடுகள் விற்கப்பட்டன. ஒப்புநோக்க, நான்காம் காலாண்டில் அந்த எண்ணிக்கை 27.2 விழுக்காடு வீழ்ச்சி கண்டு 5,256 ஆனது.
ஒட்டுமொத்தமாகச் சென்ற ஆண்டில் கைமாறிய மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை 26,169. அது 2024ல் விற்பனையான 28,986 வீடுகளைக் காட்டிலும் 9.7 விழுக்காடு குறைவு.
வருடாந்தர மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை இதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டில்தான் குறைந்தது என்று வீவக தெரிவித்தது. 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அப்போது எண்ணிக்கை 4.2 விழுக்காடு சரிந்திருந்தது. தற்போதைய வீழ்ச்சியைக் காட்டிலும் அது பாதியளவுக்கும் குறைவே என்றது வீவக.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கம் சொத்துச் சந்தையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கவனிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. நீடித்த, நிலையான சொத்துச் சந்தை இருப்பதை ஊக்குவிக்கும் வகையில் தேவைக்கேற்ப அது கொள்கைகளில் மாற்றங்களைச் செய்யும் என்றும் வீவக கூறியது.

