தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீவக மறுவிற்பனை வீட்டு விலை உயர்வு மிதமடைகிறது

2 mins read
0b165772-f73c-4bdb-8bb9-376208792f5e
கோப்புப்படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் 0.9 விழுக்காடு அதிகரித்தது.

இந்த வளர்ச்சி விகிதம், முதல் காலாண்டில் பதிவான 1.6 விழுக்காட்டைவிடக் குறைவாகும்.

தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக வீவக மறுவிற்பனை வீட்டு விலை அதிகரிப்பு மிதமடைந்து வந்துள்ளது. மேலும், 2020ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டுக்குப் பிறகு காலாண்டு அடிப்படையில் விலை அதிகரிப்பு விகிதம் இவ்வளவு குறைவாகப் பதிவாகவில்லை என்று வீவக வெள்ளிக்கிழமை (ஜூலை 25) தெரிவித்தது.

2020ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டிலிருந்து வீவக மறுவிற்பனை வீட்டு விலை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால் விருப்பத்துக்கேற்பக் கட்டப்படும் (பிடிஓ) வீவக வீடுகளின் கட்டுமானம் மெதுவடைந்து போதுமான பொது வீடமைப்பு வீடுகள் விற்பனைக்கு இல்லாமல் போனது அதற்குக் காரணம்.

இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் கூடுதலான வீவக மறுவிற்பனை வீடுகள் விற்பனைக்கு வந்ததும் வீவக வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. இரண்டாம் காலாண்டில் விற்பனையான வீவக மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை 7.8 விழுக்காடு கூடி 7,102ஆகப் பதிவானது. முதல் காலாண்டில் அந்த எண்ணிக்கை 6,590ஆகப் பதிவானது.

மேலும், சென்ற ஆண்டு பதிவானதுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டுக்கான சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் மிதமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வீவக தெரிவித்தது.

ஊழியர் தேவை மிதமடைந்து வருவதையும் முதற்கட்ட அறிகுறிகள் தெரிவிப்பதாக கழகம் குறிப்பிட்டது. பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்து வருகிறது, உலகளவில் காணப்படும் வர்த்தகப் பூசல்களால் சவால்கள் தொடர்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஊழியர்களுக்கான தேவை மிதமாகிவருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

அங் மோ கியோ, பிடோக், பீ‌ஷான், புக்கிட் மேரா, ஜூரோங் ஈஸ்ட், செங்காங், தோ பாயோ, ஈசூன் ஆகிய வட்டாரங்களில் வரும் அக்டோபர் மாதம் ஏறக்குறைய 9,100 பிடிஓ வீடுகளை வீவக விற்பனைக்கு விடும். கிரேட்டர் சவுதர்ன் நீர்முகப்பு (Greater Southern Waterfront), மவுன்ட் பிளெசன்ட் ஆகிய இரு புதிய வீடமைப்பு வட்டாரங்களில் அமையும் முதல் வீடுகளும் அவற்றில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்