வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் மறுவிற்பனை விலைகள் நவம்பர் மாதம் 0.9 விழுக்காடு என சிறிதளவு ஏற்றம் கண்டன.
இருப்பினும், கைமாறிய வீடுகளின் எண்ணிக்கை குறைந்ததாக எஸ்ஆர்எக்ஸ், 99.co ஆகிய சொத்துச் சந்தை நிறுவனங்கள் குறிப்பிட்டன.
நவம்பர் மாதத்திற்கான முன்னோடி மதிப்பீடுகளை அவை இரண்டும் புதன்கிழமை (டிசம்பர் 4) வெளியிட்டன.
மாதாந்திர அடிப்படையில் 0.9 விழுக்காடு விலை ஏறிய அதே சமயம், ஆண்டுக்காண்டு அடிப்படையில் அந்த விலை ஏற்றம் 10.4 விழுக்காடாகப் பதிவானது.
விலைகள் ஏறியபோதிலும் விற்பனை குறைந்தது.
நவம்பர் மாதம் விற்பனை ஆன மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை 1,951.
அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் அது 9.6 விழுக்காடு குறைவு. அந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 2,158 வீடுகள் கைமாறின.
ஆண்டுக்காண்டு அடிப்படையில், நவம்பர் மாதம் விற்பனை ஆன வீடுகளின் விகிதம் 8.7 விழுக்காடு குறைவு. அந்த எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது சரிந்தது.
தொடர்புடைய செய்திகள்
மறுவிற்பனை வீடுகளுக்கான தேவை நிலையாக நீடித்ததால் நவம்பர் மாதம் விலைகள் உயர்ந்ததாக 99.co நிறுவனத்தின் தலைமை தரவு பகுப்பாய்வு அதிகாரி லுக்மன் ஹக்கிம் குறிப்பிட்டார்.
குறிப்பாக, மையப் பகுதிகளில், வசதிகளை அணுகுவதற்கு ஏதுவானவை என்பதால் முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் உள்ள வீடுகளுக்கான தேவை குறையவில்லை என்றார் அவர்.
அதேநேரம் விற்பனை ஆன வீடுகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு, சொத்துச் சந்தை கடுமை தவிர்ப்பு நடவடிக்கைகளும் ஒரு காரணம் என்றார் அவர். இது பருவத்திற்கேற்ப நிகழ்ந்த சரிவு என்றும் திரு லுக்மன் குறிப்பிட்டார்.
ஆனால், ‘பிராப்நெக்ஸ்’ நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளரான வோங் சியூ யிங் வேறு காரணத்தைத் தெரிவித்தார்.
வீவக வீடுகளின் மதிப்பு மீதான கடன் வரம்பு 80 விழுக்காட்டில் இருந்து 75 விழுக்காடாகக் குறைந்ததால் குறைவான வீடுகள் கைமாறியதாக அவர் குறிப்பிட்டார்.

