வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை ஜூன் மாதம் 0.6% அதிகரித்தது.
ஆனால், விற்பனையான வீடுகளின் எண்ணிக்கை குறைந்தது. பள்ளி விடுமுறைக் காலம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறினர்.
ஜூன் மாதத்தில் 1,858 வீவக மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன. இது மே மாதத்தைவிட 17.8% குறைவு. இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு இதுவே ஆகக் குறைவான எண்ணிக்கை.
சென்ற ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், விற்பனையான வீடுகளின் எண்ணிக்கை 13.1% குறைவாக இருப்பதாக நிலச்சொத்து இணையத்தளங்கள் 99.co, SRX வியாழக்கிழமை வெளியிட்ட முன்னோட்டப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
ஜூன் மாதம் பள்ளி விடுமுறைக் காலம் என்பதால் சொத்துப் பரிவர்த்தனைகள் சற்று மந்தமாக இருப்பது வழக்கம். அதோடு, கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடப்பில் இல்லாததால் அதிகமான குடும்பங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறினர்.
வீவக-வின் தேவைக்கேற்பக் கட்டித்தரப்படும் வீடுகளின் மே மாத விற்பனை ஜூன் 8ம் தேதி வரை நீடித்தது. அவசரமாக வீடு தேவைப்படாதவர்கள் இந்த விற்பனை நடவடிக்கையில் மீதமுள்ள வீடுகளின் விற்பனைக்கு விண்ணப்பம் செய்திருக்கலாம் என்று ஹட்டன்ஸ் ஏஷியாவின் தலைமை நிர்வாகி மார்க் யிப் குறிப்பிட்டார்.
வீவக வீடு வாங்குவதற்கான தகுதிக்கடிதம் மற்றொரு காரணமாக இருக்கலாம். மே மாதம் புதிதாக அறிமுகமான இந்த விதிமுறையால், சில உத்தேசப் பரிவர்த்தனைகள் தாமதமடைந்திருக்கலாம் என்று ஆரஞ்ச்டீ அண்ட் டாய் நிறுவனத்தின் ஆய்வு, பகுப்பாய்வுப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் குமாரி கிறிஸ்டீன் சன் கூறினார்.
ஆனால், எதிர்வரும் மாதங்களில் வீவக மறுவிற்பனை வீடுகளின் பரிவர்த்தனைகள் மீண்டும் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ஜூன் மாதத்தில் வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை 0.6% அதிகரித்தது. ஐந்து அறை வீடுகளின் விலையே ஆக அதிகமாக 1% உயர்ந்தது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு ஜூன் மாத விலைகள் 7.3% அதிகம்.
ஜூன் மாதத்தில், 34 வீவக வீடுகள் குறைந்தது ஒரு மில்லியன் வெள்ளிக்குக் கைமாறின. இது மே மாதத்திற்கு நிகரான எண்ணிக்கை.
தியோங் பாருவில் உள்ள மோ குவான் டெரஸ் வீடு சாதனை அளவாக $1.5 மில்லியனுக்கு விற்கப்பட்டது. இந்த 176 சதுர மீட்டர் வீட்டுக்கு ஏறக்குறைய 48 ஆண்டுகாலக் குத்தகையே மீதமுள்ளது.
இதுவரை விற்கப்பட்ட ஆக அதிக விலையான வீவக மறுவிற்பனை வீடு இது. இதற்கு அடுத்தபடியாக தோ பாயோவில் ஐந்து அறை வீடு $1.42 மில்லியனுக்கு விற்பனையானது.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்தம் 208 வீவக மறுவிற்பனை வீடுகள் மில்லியன் வெள்ளிக்கு மேற்பட்ட விலைக்கு விற்பனையாயின. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் இதுபோன்ற 166 வீடுகள் விற்கப்பட்டன.