இந்த ஆண்டின் (2024) இரண்டாம் காலாண்டில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை 2.1 விழுக்காடு அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய காலாண்டில் அந்த விகிதம் 1.8 விழுக்காடாகப் பதிவானது.
தொடர்ந்து 17வது காலாண்டாக மறுவிற்பனை வீட்டு விலை அதிகரித்திருப்பதை ஜூலை 1ஆம் தேதி கழகம் வெளியிட்ட முன்னோடி மதிப்பீடுகள் காட்டின.
2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு முதல் மறுவிற்பனை வீடுகளின் விலை அதிகரித்து வருகிறது.
2024ன் இரண்டாம் காலாண்டில் மொத்தம் 7,208 வீடுகள் கைமாறின. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 14.5 விழுக்காடு அதிகம்.
மறுவிற்பனை வீட்டு விலையும் எண்ணிக்கையும் அவற்றுக்கான வலுவான தேவையின் அடிப்படையில் அதிகரித்ததாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கூறியது.
சந்தையில் மறுவிற்பனைக்குத் தகுதிபெற்ற வீடுகளின் எண்ணிக்கை குறைந்ததும் இதற்குக் காரணம் என்று கழகம் சொன்னது.
கழக வீடுகளை வாங்கியோர் அவற்றை மறுவிற்பனை செய்வதற்குமுன் குறைந்தபட்சம் அதில் தங்கியிருக்க வேண்டிய காலத்தைப் பூர்த்தி செய்யவேண்டியது கட்டாயம். 2023ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, 2024ல் குறைவான எண்ணிக்கையிலேயே அத்தகைய வீடுகள் விற்பனைக்கு வந்ததாகக் கழகம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
வீடு வாங்குவோர், நீண்டகால அடிப்படையில் வீட்டுக் கடனைச் செலுத்துவது தொடர்பில் கவனமாகத் திட்டமிட்டுச் செயல்படும்படி கழகம் ஆலோசனை கூறியுள்ளது. வீட்டு அடைமான விகிதம் அதிகரித்திருப்பதை அது சுட்டியது.
தற்போது ஒட்டுமொத்தப் பொருளியல் நிலைமை நன்றாகவே இருந்தபோதும் புவிசார் அரசியல் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டால் உலகப் பொருளியலில் நிச்சயமற்றதன்மை உருவாகக்கூடும் என்று கழகம் குறிப்பிட்டது.
“சொத்துச் சந்தையை அரசாங்கம் தொடர்ந்து அணுக்கமாகக் கவனிக்கும். உறுதியான, நீடித்த நிலைத்தன்மையுடன் கூடிய சொத்துச் சந்தையை ஊக்குவிக்கும் வகையில், தேவைக்கேற்ப அதன் கொள்கைகளில் மாற்றம் செய்யும்,” என்று வீவக கூறியது.
இந்த ஆண்டு பிடிஓ’ எனப்படும் தேவைக்கேற்பக் கட்டப்படும் 19,600 வீடுகளைக் கழகம் விற்பனைக்கு விடும். ஜூன் மாதம் இத்தகைய எட்டுத் திட்டங்களின்கீழ் 6,900 வீடுகளை அது விற்பனைக்கு விட்டது. அவை, ஜூரோங் ஈஸ்ட், காலாங்/வாம்போ, குவீன்ஸ்டவுன், தெம்பனிஸ், உட்லண்ட்ஸ், ஈசூன் ஆகிய வட்டாரங்களில் கட்டப்படும்.
அக்டோபர் மாதம் மேலும் 14 பிடிஓ திட்டங்களின்கீழ் 8,500 வீடுகள் விற்பனைக்கு விடப்படும். அவை அங் மோ கியோ, பிடோக், புக்கிட் பாத்தோக், கேலாங், ஜூரோங் வெஸ்ட், காலாங்/வாம்போ, பாசிர் ரிஸ், செங்காங், உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்களில் அமைந்திருக்கும்.
எதிர்வரும் பிடிஓ வீட்டுத் திட்டத்தின்கீழ் வீடுகளை வாங்க விரும்புவோர் அதற்கான தகுதிக் கடிதத்திற்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கழகம் கூறியது. 2021ஆம் ஆண்டு முதல் 2025க்குள் 100,000 பிடிஓ வீடுகளை விற்பனைக்கு விட அது இலக்கு கொண்டுள்ளது.

