இரண்டாம் காலாண்டில் வீவக மறுவிற்பனை வீட்டு விலை 2.3% அதிகரிப்பு

இரண்டாம் காலாண்டில் வீவக மறுவிற்பனை வீட்டு விலை 2.3% அதிகரிப்பு

2 mins read
மறுவிற்பனை வீட்டு எண்ணிக்கையும் கூடியது
64cbf0c1-0ba5-43e0-82bc-139c02a686f9
2022ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்குப் பிறகு ஆக வேகமான வளர்ச்சி விகிதம் இது என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

முதல் காலாண்டில் அது 1.8 விழுக்காடாகப் பதிவானது.

2022ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்குப் பிறகு ஆக வேகமான வளர்ச்சி விகிதம் இது என்பதைக் கழகம் ஜூலை 26ஆம் தேதி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டின. 2022ன் நான்காம் காலாண்டில் மறுவிற்பனை வீட்டு விலை 2.1 விழுக்காடு கூடியது.

மறுவிற்பனை வீட்டு விலையும், எண்ணிக்கையும் அதிகரித்ததற்கு வலுவான தேவையும், சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவான வீடுகளே மறுவிற்பனைக்குத் தகுதி பெற்றதும் காரணங்கள் என்று கழகம் கூறியது.

இரண்டாம் காலாண்டில், ஒரு மில்லியன் வெள்ளிக்குமேல் விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று அது குறிப்பிட்டது. பெரும்பாலான மறுவிற்பனை வீடுகள் குறைந்த விலைக்கே விற்கப்பட்டன.

புவிசார் அரசியல் நிலையற்ற சூழல்களால் உலகப் பொருளியலில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ள நிலையில், வீடு வாங்குவோர் கவனமாக முடிவெடுக்க வேண்டும் என்று கழகம் ஆலோசனை கூறியது. சிங்கப்பூரில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்திருப்பதையும் அது சுட்டியது.

மார்கரெட் டிரைவில் ஐந்தறை மறுவிற்பனை வீடு ஒன்று $1,725,888க்கு விற்கப்பட்டதாக சொத்துச் சந்தை நிறுவனமான ‘இஆர்ஏ’ ஜூலை 22ஆம் தேதி தெரிவித்ததை அடுத்து கழகத்தின் கருத்து வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டின் முற்பாதியில் மறுவிற்பனை வீட்டு எண்ணிக்கை 14, 420ஆக அதிகரித்திருப்பதை சொத்துச் சந்தை ஆய்வாளர்கள் சுட்டினர். மறுவிற்பனை செய்யப்பட்ட வீடுகளின் மொத்த எண்ணிக்கையில் பெரிய வீடுகளின் விகிதம் 29.2 விழுக்காடாக உயர்ந்திருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த ஆண்டின் முற்பாதியில் மறுவிற்பனை செய்யப்பட்ட கழக வீடுகளில் 39.3 விழுக்காட்டு வீடுகள் பழைய வீடுகள் என்பதை வல்லுநர்கள் சுட்டினர். வீடு வாங்குவோர் பழைய வீடுகளை விரும்பும் போக்கு அதிகரிப்பதாக அவர்கள் கூறினர்.

காலாங்/வாம்போ, புக்கிட் மேரா, தோ பாயோ போன்ற முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் உள்ள மறுவிற்பனை வீடுகளின் விற்பனை அதிகரித்திருப்பதை அவர்கள் சுட்டினர்.

இந்த ஆண்டு முழுவதற்குமான மறுவிற்பனை வீட்டு எண்ணிக்கை 26,000க்கும் 28,0000க்கும் இடைப்பட்டிருக்கும் என்றும் மறுவிற்பனை வீட்டு விலை 10 விழுக்காடு உயரும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்