தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை 2.5% ஏற்றம்

2 mins read
453a3bd9-1b32-4acb-bb88-e614c3e23a3b
2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்தம் 8,035 வீவக மறுவிற்பனை வீடுகள் கைமாறின. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை 2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2.5 விழுக்காடு ஏற்றம் கண்டது.

இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் விலை ஏற்றம் 0.2 விழுக்காடு உயர்ந்துள்ளது. இரண்டாம் காலாண்டில் அது 2.3 விழுக்காடாக இருந்தது.

வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை 2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது.

இந்தத் தகவலை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் செவ்வாய்க்கிழமை ( அக்டோபர் 1) வெளியிட்டது.

2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்தம் 8,035 வீவக மறுவிற்பனை வீடுகள் கைமாறின. இரண்டாம் காலாண்டில் அந்த எண்ணிக்கை 7,352ஆக இருந்தது.

2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 6,695 வீடுகள் மட்டுமே கைமாறியதாக வீவக தரவுகள் காட்டுகின்றன. தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது 20 விழுக்காடு விற்பனை அதிகரித்துள்ளது.

இவ்வாண்டு சந்தையில் தேவைக்கு ஏற்ற வீடுகள் இல்லாதது தான் மறுவிற்பனை வீடுகளின் விலை ஏற்றத்தை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் விற்பனைக்கு வரும் வீடுகள் குறைந்த கால தங்கும் விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை. அதனால் அவை இவ்வாண்டு விற்பனைக்கு தகுதிபெறவில்லை.

வீட்டு உரிமையாளர்கள் பலர் தங்களது சிறு வீடுகளில் இருந்து பெரிய வீடுகளுக்கு மாற முயற்சி செய்கின்றனர். தனியார் வீடுகளின் விலை அதிகமாக உள்ளதால் அவர்கள் வீவக மறுவிற்பனை வீடுகளை வாங்குவதில் அதிக நாட்டம் செலுத்துகின்றனர் என்று ஆரஞ்சு டீ நிறுவனத்தை சேர்ந்த கிரிஸ்டீன் சுன் தெரிவித்தார்.

இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் மட்டும் 328 வீவக மறுவிற்பனை வீடுகள் 1 மில்லியன் வெள்ளி விலையைத் தாண்டி விற்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டில் மட்டும் 747 மறுவிற்பனை வீடுகள் 1 மில்லியன் வெள்ளி விலையைத் தாண்டி விற்கப்பட்டன.

கடந்த ஆண்டு மில்லியன் வெள்ளி விலையைத் தாண்டி விற்கப்பட்ட மறுவிற்பனை வீடுகள் மொத்த எண்ணிக்கை 469 என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்