மறுவிற்பனை வீடுகளின் விலைகள் நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்திருப்பதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) அறிவித்துள்ளது.
வீவக மறுவிற்பனை வீடுகளின் விலைகள் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் முதன்முறையாகச் சரிவைச் சந்தித்துள்ளன.
சென்ற ஆண்டின் (2025) நான்காவது காலாண்டுடன் ஒப்புநோக்க, இவ்வாண்டின் முதல் காலாண்டில் வீட்டு விலைகள் 0.1 விழுக்காடு குறைந்துள்ளன.
புதன்கிழமை (ஏப்ரல் 1) அதன் அண்மைய மறுவிற்பனை வீட்டு விலைக் குறியீட்டின் முன்னோடி மதிப்பீட்டை வெளியிட்டது வீவக.
காலாண்டு அடிப்படையில் மறுவிற்பனை விலைகளில் இதற்கு முன்னர் கடைசியாக ஏற்பட்ட சரிவு, 2019ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பதிவுசெய்யப்பட்டது என்று கழகம் கூறியது.
‘‘கடந்த 5 காலாண்டுகளாக விலைகள் மெதுவாக வளர்ச்சி அடைந்தன; அல்லது வளர்ச்சியின்றி நிலையாக இருந்தன. அதற்குப் பிறகு இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது,’’ என்றும் வீவக குறிப்பிட்டது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில், அதாவது மார்ச் 30 வரை, மறுவிற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 6,179ஆக இருந்தது. அது கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் பதிவான 6,473 பரிவர்த்தனைகளைவிட 4.5 விழுக்காடு குறைவு என்றும் கழகம் தெரிவித்தது.

