வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை தொடர்ந்து மூன்றாவது காலாண்டாகக் குறைந்துள்ளது.
வீவக வியாழக்கிழமை (அக்டோபர் 1) வெளியிட்ட முன்னோடி மதிப்பீடுகளில் அத்தகவல் இடம்பெற்றுள்ளது.
தனியார் வீட்டு உரிமையாளர்களாக இருந்து வீவக வீடுகளுக்கு மாறிக்கொள்பவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு அகற்றப்பட்டபோதும் விலை குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டக் கணிப்புகளின்படி வீவக மறுவிற்பனை வீட்டு விலை மூன்றாம் காலாண்டில் 0.2 விழுக்காடு இறங்கியது. இவ்வாண்டு முதல் காலாண்டில் விலை 0.1 விழுக்காடு குறைந்தது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் முதன்முறையாக அப்போதுதான் விலை குறைந்தது.
பிறகு இரண்டாம் காலாண்டில் வீவக மறுவிற்பனை வீட்டு விலை 0.3 விழுக்காடு குறைந்தது.
வீவக மறுவிற்பனை வீட்டுப் பரிவர்த்தனைகள்
இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் மொத்தம் 7,528 வீவக மறுவிற்பனை வீட்டுப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றன. இந்த எண்ணிக்கை, அதே காலகட்டத்தில் சென்ற ஆண்டு பதிவான 7,157 பரிவர்த்தனைகளைவிட 5.2 விழுக்காடு அதிகமாகும்.
தனியார் வீட்டு உரிமையாளர்களாக இருந்தவர்கள் வீவக வீடுகளை வாங்க 15 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை ஜூலை மாதம் 28ஆம் தேதி அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து வீவக மறுவிற்பனை வீட்டு விலையோ விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையோ குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கவில்லை என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கூறியது.
“எப்படியிருந்தாலும் நாங்கள் மறுவிற்பனை வீட்டுச் சந்தையைத் தொடர்ந்து கண்காணிப்போம்,” என்று அது குறிப்பிட்டது.
2022ஆம் ஆண்டு அறிமுகமான விதிமுறை
2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 மாதக் காத்திருப்பு விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. வீவக மறுவிற்பனை வீடுகளை வாங்க எண்ணும் அதிகப் பணம் உள்ள தனியார் வீட்டு உரிமையாளர்களிடையே இது தொடர்பான தேவையைத் தணிப்பது அதன் நோக்கம்.
சந்தை நிலவரம் மேம்பட்டதாலும் வீவக மறுவிற்பனை வீட்டு விலை கணிசமாக மிதமடைந்திருப்பதாலும் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார்.
தனியார் வீட்டுச் சந்தையில் விலை இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் 1.4 விழுக்காடு கூடியது. இரண்டாம் காலாண்டில் பதிவான 0.5 விழுக்காட்டைவிட அது அதிகமாகும்.
எனினும், அவ்வீட்டுப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை முந்தைய காலாண்டில் பதிவானதைக் காட்டிலும் கிட்டத்தட்ட 30 விழுக்காடு குறைந்தது. எண்ணிக்கை, 6,148 வீடுகளிலிருந்து 4,296க்குச் சரிந்தது.
