வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் உள்ள வீடுகளின் மறுவிற்பனை விலைகள் ஆகஸ்ட் மாதம் சற்று இறங்கின.
ஜூலை மாதத்தைக் காட்டிலும் அந்த விலைகள் 0.2 விழுக்காடு குறைந்தன.
இருப்பினும், ஒட்டுமொத்த எல்லா வீடுகளுக்குமான மறுவிற்பனை விலைகள் ஆகஸ்ட் மாதம் 0.5 விழுக்காடு ஏற்றம் கண்டன.
அதேபோல, முதிர்ச்சியடையாத பேட்டைகளில் உள்ள வீடுகளின் மறுவிற்பனை விலைகளும் ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து 1.2 விழுக்காடு உயர்ந்தன.
எஸ்ஆர்எக்ஸ் மற்றும் 99.co சொத்து நிறுவனங்கள் புதன்கிழமை (செப்டம்பர் 4) வெளியிட்ட முன்னோடி மதிப்பீட்டு அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்று உள்ளன.
ஆண்டு அடிப்படையில் ஒட்டுமொத்த வீவக மறுவிற்பனை விலைகள் 7.5 விழுக்காடு உயர்ந்ததை அந்த மதிப்பீடுகள் காட்டின.
வீட்டின் மதிப்பீட்டுக்கு மேல் தரப்படும் ரொக்கம் இன்றி அதிகமான வீடுகள் விற்கப்படுவதன் காரணமாக மறுவிற்பனை விலைகள் சிறிது ஏறியதாக ஹட்டன்ஸ் ஏஷியா சொத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் யிப் தெரிவித்து உள்ளார்.
இருந்தபோதிலும், ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கிய சீனர்களின் ஏழாவது (கோஸ்ட்) மாதத்தில் விற்பனை ஆன வீடுகளின் எண்ணிக்கை குறைந்தன.
தொடர்புடைய செய்திகள்
ஜூலையில் 3,049 வீடுகள் கைமாறிய நிலையில் அதற்கு அடுத்த மாதம் அந்த எண்ணிக்கை 14.6 விழுக்காடு சரிந்து 2,605ஆகப் பதிவானது.
அந்த மாதத்தில் சொத்துகளை வாங்குவது அபசகுனமாகக் கருதப்படுவதால், வீடு வாங்குவோர் அந்தச் செயலைத் தள்ளிப் போட்டிருக்கலாம் என்றார் ஆரஞ்சுடீ சொத்துக் குழுமத்தின் தலைமை ஆய்வாளரும் உத்தி வகுப்பாளருமான கிறிஸ்டைன் சன்.
ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் விற்கப்படும் வீவக வீடுகளின் எண்ணிக்கையும் ஆகஸ்ட் மாதம் சரிந்தன. ஜூலை மாதம் 120 வீடுகள் விற்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட்டில் அந்த எண்ணிக்கை 104 ஆனது.
ஆகஸ்ட் மாதம் விற்கப்பட்ட மறுவிற்பனை வீடுகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் மில்லியன் வெள்ளி வீடுகளின் விகிதம் 4 விழுக்காடாகப் பதிவானது.

