சிங்கப்பூரின் வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளின் விலைகள் 2024ஆம் ஆண்டு 9.6 விழுக்காடு அதிகரித்தன.
2023ஆம் ஆண்டு அந்த விலைகள் 4.9 விழுக்காடு உயர்ந்தன.
2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு முதல் மறுவிற்பனை விலைகள் ஒவ்வொரு காலாண்டிலும் ஏற்றம் கண்டு வருகின்றன.
இருப்பினும் 2024ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் விலை ஏற்றம் சற்று குன்றியது.
மூன்றாம் காலாண்டில் 2.7 விழுக்காடு விலை ஏற்றம் பதிவாகி இருந்த நிலையில் நாலாம் காலாண்டில் 2.5 விழுக்காட்டுக்கு அது இறங்கியது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (HDB) வியாழக்கிழமை (ஜனவரி 2) வெளியிட்ட முன்னோடி மதிப்பீட்டு அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்று உள்ளன.
விலை ஏற்றம் சுருங்கிய அதே நேரம் நாலாம் காலாண்டில் மறுவிற்பனைச் சந்தையில் விலைபோன வீடுகளின் எண்ணிக்கையும் 21.4 விழுக்காடு குறைந்தது.
மூன்றாம் காலாண்டில் 8,035 வீடுகள் விற்கப்பட்ட நிலையில் கடந்த காலாண்டில் அந்த எண்ணிக்கை 6,314 ஆகப் பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
டிசம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, 2024 ஆம் ஆண்டு முழுமைக்குமான மறுவிற்பனை வீடுகளின் விற்பனை 8 விழுக்காடு கூடியது.
2023ஆம் ஆண்டு முழுவதும் 26,735 வீடுகள் விற்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 28,876க்கு ஏறியது.
மறுவிற்பனை விலைகளும் விற்பனையும் அதிகரித்ததற்கு இறுக்கமான வீட்டு விநியோக நிலவரமும் விரிவடைந்துள்ள தேவையும் முக்கிய காரணங்கள் என்று வீவக தெரிவித்து உள்ளது.
வீவக வீடுகளின் சொத்து மதிப்பில் அதிகபட்சம் 80 விழுக்காடு கடன் வழங்கப்படும் என்ற வரம்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 75 விழுக்காட்டுக்குக் குறைக்கப்பட்டது.
வீடு வாங்குவோர் கவனமாக, முன்யோசனையுடன் செயல்படுவதை ஊக்குவிக்க அந்த மாற்றம் செய்யப்பட்டது.
சொத்துச் சந்தை சுழற்சிக்கு உட்பட்டது என்பதால், அதிக விலை கொடுத்து வாங்குவோர் பின்னர் விலை வீழ்ச்சி அடையும்போது பாதிக்கப்படுவர். எனவே வீட்டை வாங்கும்போது விவேக நிதித்திறனுடன் செயல்படுமாறு வீவக அறிவுறுத்தி உள்ளது.
“அரசாங்கம் சொத்துச் சந்தை நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணிக்கும். சந்தையின் நிலைப்பாட்டையும் நீடித்த நிலைத்தன்மையையும் அதிகரிப்பதற்கான தேவை எழும்போது கொள்கைகளை அரசாங்கம் சரிக்கட்டும்,” என்றும் வீவக தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.