அடுத்த சில ஆண்டுகளில் மேலும் அதிகமான வீடுகள் சந்தையில் விற்பனைக்கு வருவதாலும் விலை அதிகரிப்பைத் தணிக்கும் தற்போதைய நடவடிக்கைகள் தொடர்ந்து நடப்பில் இருப்பதாலும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகச் சந்தை நிலைப்படுத்தப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
விநியோகத்திற்கும் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளியால் மறுவிற்பனை வீட்டு விலை அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்ட திரு லீ, கொவிட்-19 கொள்ளைநோயைக் காரணமாகக் காட்டினார். புது வீடுகளின் கட்டுமானத்தை அந்தக் காலகட்டம் பாதித்ததோடு தங்கள் வீடு தயாராவதில் மக்களுக்குக் கவலை ஏற்பட்டு தேவையை மேலும் அதிகரிக்கச் செய்தது.
அதிகப்படியான மறுவிற்பனை விலையால் சிங்கப்பூரர்களிடையே பொது வீடமைப்பு கட்டுப்படியான விலையில் கிடைப்பது தொடர்பில் கவலை எழுந்துள்ளது. நாடாளுமன்றத்தில் மார்ச் 5ஆம் தேதி நடந்த தேசிய வளர்ச்சி அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது திரு சேய் யாவ் சுவன் (ஜூரோங் குழுத்தொகுதி), திரு பிரித்தம் சிங் (அல்ஜுனிட் குழுத்தொகுதி) ஆகிய இருவரும் இந்த அக்கறை குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த திரு லீ, குறைந்தபட்சக் குடியிருப்புக் காலகட்டத்தை எட்டும் புதிய வீடுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க உள்ளதாகக் குறிப்பிட்டார். 2025ஆம் ஆண்டில் 8,000ஆக இருந்து 2026ல் 13,500ஆக அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார் அவர்.
இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்லும் என்றும் 2028ல் 19,500ஐ அது எட்டும் என்றும் திரு லீ விவரித்தார்.
“அடுத்த ஆண்டிலிருந்து தேவைக்கு ஈடுகொடுக்க முடியாத விநியோக நிலை மீளத் தொடங்கும்,” என்று அமைச்சர் கூறினார்.
வீட்டு விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த நடப்பில் உள்ள தணிக்கை நடவடிக்கைகளும் சந்தையில் தொடர்வதால் வீவக மறுவிற்பனைச் சந்தை நிலைப்படுத்தப்படும் என்றார் திரு டெஸ்மண்ட் லீ.
தொடர்புடைய செய்திகள்