வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் (வீவக) பிடாடாரி பேட்டைப் பெருந்திட்டம், 2024ஆம் ஆண்டுக்கான உலக அளவிலான தங்க விருதை வென்றுள்ளது.
கரையோரப் பூந்தோட்டத்தில் மே 30ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த விருது வழங்கப்பட்டது.
பாரிசைத் தலைமையகமாகக் கொண்ட அனைத்துலக சொத்துச் சந்தைக் கூட்டமைப்பான ‘ஃபியாப்சி’ அந்த விருதை வழங்கியது. உலகெங்குமுள்ள மிகச் சிறந்த கட்டுமானத் திட்டங்களை ஆய்வுசெய்த அனைத்துலக நடுவர் குழு விருதுபெறும் திட்டங்களைத் தேர்வு செய்தது.
பெருந்திட்டப் பிரிவில் தங்க விருதைப் பெறுவது இதுவே முதல்முறை என்று கூறிய வீவக, இந்த ஆண்டில் (2024) சிங்கப்பூருக்குக் கிடைத்த உலக அளவிலான தங்க விருது இதுமட்டுமே என்று கூறியது.
கட்டடக் கலை உன்னதம், புத்தாக்க வடிவமைப்பு, மேம்பாடு, கட்டுமானம், நகர்ப்புற நிலவனப்பிற்கு உருமாற்ற அடிப்படையிலான பங்களிப்பு போன்ற அம்சங்களுக்காக பிடாடாரி பேட்டை இந்த விருதைப் பெற்றுள்ளதாகக் கழகம் கூறியது.
இந்த விருதைப் பெறுவது குறித்துப் பெருமை அடைவதாக கழகத்தின் நகரத் திட்டமிடல் துறை முதன்மை அதிகாரி டாக்டர் சோங் ஃபூக் லூங் கூறினார்.
“குடியிருப்பாளர்களுக்குத் தரமான வாழ்க்கைச் சூழலை உருவாக்க, வீவக தொடர்ந்து புத்தாக்கமிக்க வடிவமைப்புக் கருத்துகளை ஆய்வுசெய்கிறது,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
பிடாடாரி வீடமைப்புப் பேட்டையில் அல்காஃப், பார்ட்லி ஹைட்ஸ், பார்க் எட்ஜ், உட்லே என நான்கு மாவட்டங்களுக்கான 12 பிடிஓ திட்டத்தின்கீழான வீடுகள் கட்டப்படுகின்றன.
அவற்றில் உட்லே மாவட்ட வீடுகளின் கட்டுமானம் நிறைவுற்றதாகவும் 2025ஆம் ஆண்டுக்குள் இதர வீடுகளின் கட்டுமானமும் நிறைவுபெறும் என்றும் வீவக தெரிவித்தது.

