ஆபத்தான முறையில் காரை ஓட்டி மரணம் விளைவித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவர்

2024 தெம்பனிஸ் விபத்து

ஆபத்தான முறையில் காரை ஓட்டி மரணம் விளைவித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவர்

2 mins read
9fad6465-c80c-4a96-b535-b67dc4d23d26
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) அரசு நீதிமன்றத்திலிருந்து புறப்படும் முகம்மது ஷஃபி இஸ்மாயில். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தெம்பனிசில் 2024ஆம் ஆண்டு இருவரின் உயிரைப் பலிவாங்கிய ஆறு வாகன விபத்துக்குக் காரணமான ஓட்டுநர், ஆபத்தான முறையில் காரை ஓட்டி மரணம் விளைவித்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். முகம்மது ஷஃபி இஸ்மாயில், 45, ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி மரணம் விளைவித்தது, காயம் ஏற்படுத்தியது உள்ளிட்ட பல போக்குவரத்து விதிமீறல் குற்றச்சாட்டுகளை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) ஒப்புக்கொண்டார்.

பிடோக்கில் ‘கிராப் ஹிட்ச்’ பயணியை இறக்கிவிட்ட பிறகு, தெம்பனிஸ் அவென்யூ 1-அவென்யூ 4 சந்திப்பில் மணிக்குக் குறைந்தபட்சம் 129 கிலோமீட்டர் வேகத்தில் அவர் காரை ஓட்டினார். அங்கு அனுமதிக்கப்பட்ட வேக வரம்பு 50 கிலோமீட்டர் மட்டுமே.

போக்குவரத்துச் சந்திப்பில் குறைந்தது 26 நொடிகள் சிவப்பு விளக்கு எரிந்தபோதிலும், அவர் காரை நிறுத்தத் தவறினார். ஷஃபியின் கார் மோதியதில் 57 வயது நோர்ஸிஹான் ஜுவாஹிப், 17 வயது மாணவி இருவரும் உயிரிழந்தனர். தாம் பணிபுரிந்த நிறுவனத்தின் வேனில் நோர்ஸிஹான் வேலைக்குச் சென்றபோது இந்த விபத்து நேர்ந்தது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அந்த மாணவி, பள்ளியின் வருடாந்தர ஓட்டத்தில் பங்கேற்கத் தந்தையின் காரில் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தின் தாக்கத்தால் அந்த கார் தலைகீழாகக் கவிழ்ந்தது. காருக்கு அடியில் சிக்கி அந்த மாணவி உயிரிழந்தார். மகளின் இழப்பால் அவருடைய தாயார் கடும் மனச்சோர்வுக்கு ஆளாகி, வேலை செய்வதை நிறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் மேலும் எண்மர் காயமடைந்தனர்.

2024 ஏப்ரல் 22ஆம் தேதி ஏற்பட்ட இந்த விபத்துக்குமுன் ஷஃபி, சமிக்ஞை காட்டாமல் மீண்டும் மீண்டும் தடம் மாற்றி ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது.

விபத்தில் ஷஃபிக்குக் கை முறிவு ஏற்பட்டாலும் நிரந்தர உடற்குறைவு இல்லை என வழக்கறிஞர் தெரிவித்தார். விபத்து ஏற்பட்டு இரண்டு நாள் கழித்து மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் அவர் கைது செய்யப்பட்டார். அவரது ஓட்டுநர் உரிமம் உடனடியாகத் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
விபத்துதெம்பனிஸ்மரணம்