ஏமாந்தோரிடமிருந்து $656,000 பெற கம்போடிய மோசடிக் கும்பலுக்கு உதவிய சிங்கப்பூரர்

ஏமாந்தோரிடமிருந்து $656,000 பெற கம்போடிய மோசடிக் கும்பலுக்கு உதவிய சிங்கப்பூரர்

1 mins read
adf13de6-338c-4d73-88ef-2e57a4057691
மோசடிக் குற்ற வழக்கில் முகம்மது ஃபிர்தௌஸ் அப்துல் ரஹ்மானுக்கு வரும் ஆகஸ்ட்டில் தண்டனை விதிக்கப்படும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஏமாற்று வேலைக்காகச் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு 2024ல் விடுதலையான ஆடவர் ஒருவர், அதே ஆண்டின் பிற்பகுதியில் மீண்டும் குற்றம் புரியத் தொடங்கி, கம்போடியாவில் இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றில் இணைந்து செயல்பட்டார்.

அங்கிருந்தபோது, சிங்கப்பூர்வாசிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட மோசடித் தொலைபேசி அழைப்புகளில் அரசாங்க அதிகாரிகள்போல நடித்து முகம்மது ஃபிர்தௌஸ் அப்துல் ரஹ்மான் ஏமாற்றினார். அவர் சிங்கப்பூர் திரும்பிய பிறகு, குறைந்தது 14 பேரிடமிருந்து கிட்டத்தட்ட $656,800 பெற உதவினார்.

தற்போது தடுப்புக் காவலில் உள்ள 37 வயது சிங்கப்பூரரான அவர், குற்றச்செயல்களின் மூலம் கிடைத்த பலன்களைக் கையாண்டது, குற்றக் கும்பல் ஒன்றில் உறுப்பினராக இருந்தது என இரு குற்றச்சாட்டுகளை திங்கட்கிழமை (ஜூன் 22) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

அவரது குற்றங்கள் எவ்வாறு வெளிச்சத்திற்கு வந்தன என்பது குறித்த விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. எனினும், அவர் 2025ல் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

இதற்கிடையே, ஃபிர்தௌசுக்குக் குறைவான தண்டனை விதிக்குமாறு அவரின் தற்காப்பு வழக்கறிஞர் டோனி சுவா நீதிமன்றத்தில் வாதிட்டார்.

ஃபிர்தௌஸ் இதயம் தொடர்பான பிரச்சினையால் பாதிக்கப்பட்டு பலவீனமான உடல்நலத்துடன் இருப்பதாகவும், தடுப்புக் காவலில் இருந்தபோது அவர் மூன்று நாள்கள் கோமாவில் இருந்ததாகவும் திரு சுவா கூறினார்.

இவ்வழக்கில் ஃபிர்தௌசுக்கு வரும் ஆகஸ்ட்டில் தண்டனை விதிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்