இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வரத் தடை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவர், புதியதோர் அடையாளத்துடன் இங்கு மீண்டும் வர முடிவு செய்தார்.
அந்த ஆடவர் பின்னர் சிங்கப்பூரில் திருமணம் செய்துகொண்டு இங்கு குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பிறகு, சிங்கப்பூர் நிரந்தரவாசத்துக்கும் பின்னர் குடியுரிமைக்கும் விண்ணப்பிக்க அவர் முடிவெடுத்தார்.
தடை செய்யப்பட்டிருந்தும் சிங்கப்பூருக்கு மீண்டும் வந்தது, இங்கு வருவதற்கான சரியான அனுமதிச்சீட்டு வைத்திருக்காதது, நுழைவு அனுமதி பெற தவறான தகவல்களை அளித்தது, குடியுரிமை பெற தவறான தகவல்களை அளித்தது ஆகிய குற்றங்களை முகம்மது சல்மான், 45, புதன்கிழமை (செப்டம்பர் 17) ஒப்புக்கொண்டார்.
பிப்ரவரி 18 முதல் விசாரணைக்காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த பாகிஸ்தான் நாட்டவர், காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
மோசடி செய்ததாகவும் அரசு ஊழியருக்குத் தவறான தகவல்களை அளித்ததாகவும் 1998ல் சல்மான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதாக அரசு துணை வழக்கறிஞர் ஸொவ் யிஹாங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மாலிக் இர்ஃபான் அர்ஷத் என அப்போது அறியப்பட்ட சல்மான், இரண்டு மாதங்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்ததோடு, தண்டனைக்குப் பிறகு சிங்கப்பூருக்கு மீண்டும் வரத் தடை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூருக்கு வர நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டதைத் தெரிந்தும் 1999 நவம்பர் 19ஆம் தேதி, சல்மான் ஒரு புதிய அடையாளத்துடன் சிங்கப்பூருக்குத் திரும்ப முடிவெடுத்ததாக வழக்கறிஞர் ஸொவ் கூறினார்.
2002 டிசம்பர் 30ஆம் தேதியும் 2007 ஆகஸ்ட் 10ஆம் தேதியும் முறையே நிரந்தரவாசத்துக்கும் சிங்கப்பூர் குடியுரிமைக்கும் விண்ணப்பித்தபோது சல்மான் தவறான தகவல்களை அளித்திருந்ததாகக் குற்றப்பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அவர் அளித்த தவறான தகவல்கள் காரணமாக, இரண்டு விண்ணப்பங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சல்மானுக்கு அக்டோபர் 2ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.