மகளுக்கு பாலியல் வன்கொடுமை; ‘கடைக்கண் பார்வையே’ காரணம் என்றார்

1 mins read
52 வயது ஆடவருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை
2bca4f5e-5e1f-430a-a060-5f49036ce2af
24 பிரம்படிகளுக்குப் பதிலாக சிறைத் தண்டனையில் மேலும் ஓராண்டு சேர்க்கப்பட்டது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்தியாவில் இருந்த உறவினர்களைத் தன் மனைவி பார்க்கச் சென்றபோதும் இரவுநேரத்தில் அந்த மனைவி வேலைக்குச் சென்றபோதும், மகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் 52 வயது ஆடவர் ஒருவர்.

சிறுமி 2019ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரை தமது 12வது வயது முதல் 14வது வயது வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் என்று அறியப்படுகிறது.

குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து ஆடவருக்கு ஜனவரி 16ஆம் தேதி 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆடவரின் வயது கருதி 24 பிரம்படிகளுக்குப் பதிலாக சிறைவாசத்தில் மேலும் ஓராண்டு சேர்க்கப்பட்டது.

சிங்கப்பூர் நிரந்தரவாசியான அந்த ஆடவர், தன் மகள் தன்னைக் கடைக்கண்ணால் பார்த்து மயக்கியதாலேயே அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தத் தான் தூண்டப்பட்டதாகக் கைதானபின் மனநல மதிப்பீட்டின்போது கூறியிருந்ததாக அரசுத்தரப்பு குறிப்பிட்டது.

அரசுத்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இவ்வாறு கூறியபோது, ஆடவர் உடனே அதுதான் உண்மை என்று கூச்சலிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் அம்மாவிடமிருந்து அந்த ஆடவர் மணவிலக்கு பெற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.

சிறுமியின் படுக்கையறைக்கு இரவுவேளை சென்று தகாத முறையில் மகளை அந்த ஆடவர் தொட்டதாகக் கூறப்பட்டது. வாட்ஸ்அப் மூலம் ஆபாசக் காணொளி ஒன்றையும் ஆடவர் தன் மகளுக்கு அனுப்பி இருந்தார்.

இனி பொறுத்துக்கொள்ள முடியாது என்று முடிவெடுத்த சிறுமி, அவரின் ஆசிரியரிடம் நடந்ததைப் பற்றிக் கூறியதை அடுத்து ஆடவர் கைதானார்.

குறிப்புச் சொற்கள்