ஜூரோங்கில் இருக்கும் போக்குவரத்து சந்திப்பு ஒன்றில் சிவப்பு விளக்கு எரிந்தபோது, வாகனத்தை நிறுத்தாமல் சென்று சைக்கிளோட்டிமீது மோதிய ஆடவருக்குத் திங்கட்கிழமை (ஜனவரி 20) $4,800 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்த சைக்கிளோட்டிக்கு முதுகெலும்பு முறிந்ததாகக் கூறப்பட்டது.
காயமடைந்த சைக்கிளோட்டியும் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் பாதசாரிகளுக்கான சிவப்பு விளக்கு எரிந்தபோது சாலையைக் கடந்ததாக ஓட்டுநரின் வழக்கறிஞர் கூறினார்.
இயன் தாய் ஷி ஜியான், 35, என்ற அந்த ஆடவர் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
தாய் ஷிமீது கவனமின்றி வாகனம் ஓட்டி, கடுமையான காயம் விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
ஆசிரியரான தாய் ஷிக்கு வாகனம் ஓட்ட ஐந்தாண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி காலை 11 மணியளவில் ஜூரோங் டவுன் ஹால் சாலைக்கும் பூன் லே வேக்கும் இடையே இருக்கும் போக்குவரத்து சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.