மரபு தொடர, மனங்கள் மகிழ பாடுபடுபவர்

மனிதர்கள் தனித்து இயங்குவதில்லை. பிறரை நம்பி, வேலையை ஒப்படைத்து, அவர்களுக்கு வழிகாட்டுவதன் மூலமும் திறமையை வெளிப்படுத்தலாம் என்கிறார் இந்த உணவக உரிமையாளர்.

மரபு தொடர, மனங்கள் மகிழ பாடுபடுபவர்

படம்: ஆதர்ஷ் வின்சென்ட்

23 Sep 2024 - 5:16 am

2 mins read

நூற்றாண்டு கண்ட ‘இஸ்லாமிக்’ உணவகத்தின் மூன்றாவது தலைமுறை உரிமையாளரான கலிலூர் ரஹ்மான், குடும்ப மாண்பைக் காப்பதில் எதிர்கொள்ளும் அழுத்தத்தையும் அன்றாட வாழ்க்கைச் சவால்களையும் சுறுசுறுப்புடன் எதிர்கொள்பவர்.

பிறக்கும்போது இவருக்கு ஒரு சிறுநீரகம் மட்டும் இருந்ததை வெகுகாலத்திற்குப் பிறகுதான் அறிந்துகொண்டார். எனவே, 2021ல் அறுவை சிகிச்சை மூலம் கலிலுக்குச் சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

அந்த அறுவை சிகிச்சை தனக்குத் திருப்புமுனையாக அமைந்ததாகக் கூறுகிறார் இவர்.

“நான் வேலைசெய்யும் வேகத்தைக் குறைக்கவேண்டும். என் வேலையின் சில பகுதிகளை மற்றவர்களைச் செய்யச் சொல்லவேண்டும். அத்துடன், பிறர் மீது நம்பிக்கை வைக்கவேண்டும்,” என்கிறார் கலில்.

அலங்கரிக்கப்பட்ட இஸ்லாமிக் உணவகத்தின் உட்புறம்.
அலங்கரிக்கப்பட்ட இஸ்லாமிக் உணவகத்தின் உட்புறம். - படம்: ஆதர்ஷ் வின்சென்ட்

இந்த மாற்றங்கள் எளிதல்ல என்றாலும் குழு ஒத்துழைப்பு, மீள்திறன் போன்ற குணங்களை வளர்த்துக்கொண்டு இறுதியில் மனத்தளவில் மிளிர்வதை கலில் உணர்கிறார்.

735 நார்த் பிரிட்ஜ் சாலையிலுள்ள இஸ்லாமிக் உணவகம், மூன்று தலைமுறைகளைத் தாண்டியது. குடும்ப வர்த்தகத்தை நடத்துவதில் ஏற்படும் சிக்கல்களையும் கலில் சமாளிக்க வேண்டியுள்ளது.

குடும்பப் பிணைப்பை உறுதிசெய்துகொண்டதாகக் கூறிய கலில், “குடும்பத்தினருக்கிடையே வேறுபாடுகள் இருந்தன. ஆயினும் வர்த்தகத்திற்கு எது நல்லதோ அதில் தொடர்ந்து கவனத்துடன் இருந்தேன்,” என்றார்.

தொடக்கத்தில் மருந்து உற்பத்தித் துறையில் படித்து அதில் வேலைசெய்த இவர் பின்னர், உணவகத் தொழிலில் முழுமூச்சாக ஈடுபட்டார். கலிலின் சமூக உணர்வை அங்கீகரிக்கும் விதமாக 2018ல் அவருக்கு மரபுடைமை நாயகர் விருது வழங்கப்பட்டது.

சிங்கப்பூரின் மரபுடைமைக்குக் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றிய தனிநபர்களுக்கு அந்த விருது வழங்கப்படுகிறது. இதன் பிறகு மக்கள் கழகம் இவ்வாண்டு ஜூலையில் வழங்கிய சமூக உணர்வு விருதையும் கலில் பெற்றார்.

“விருது பெற்றது என்னை நெகிழ வைக்கிறது. நாங்கள் வர்த்தகம் மட்டும் நடத்துவோரில்லை, சமூகத்திற்குப் பங்களிக்கிறோம் என்பதை இது நினைவூட்டுகிறது,” என்கிறார் இவர்.

மேலும், பாரம்பரியத்தையும் நவீன வர்த்தக முறைகளையும் சமநிலைப்படுத்துவது எளிதன்று என்றாலும் காலத்திற்கு ஏற்ற முறையில் மாறிவருவது அவசியம் என்கிறார்.

துருக்கிய பாணியில் அலங்கரிக்கப்பட்ட இஸ்லாமிக் உணவகம்.
துருக்கிய பாணியில் அலங்கரிக்கப்பட்ட இஸ்லாமிக் உணவகம். - படம்: ஆதர்ஷ் வின்சென்ட்

“பிரியாணியின் செய்முறை கடந்த நூறாண்டுகளாக மாற்றப்படவில்லை. மிகுதியான காரமற்ற இந்த பிரியாணியை அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் மற்ற அம்சங்களை மேம்படுத்தியிருக்கிறோம். எடுத்துக்காட்டாக, டாஸ்மேனியாவிலிருந்து காய்கறிகளைத் தருவித்து சமைக்கிறோம்,” என்றார் கலில்.

துருக்கிய பாணியிலான மேசைத்துணி, விளக்கு, ஜப்பானிய ‘நொரித்தாக்கே’ வகைப் பாத்திரங்கள் ஆகியவற்றைச் சேர்த்து பல கலாசார அம்சங்களைக் கொண்ட சொகுசு உணவுச் சூழலை உருவாக்க முற்பட்டதாக இவர் கூறினார்.

“தமிழ் பேசும் குடும்பத்திலிருந்து வந்திருந்தபோதும் அதனையும் கடந்து மற்ற பண்பாடுகளையும் தழுவிக் கொள்வது எங்கள் மனப்பான்மை,” என்றார் கலில்.

உணவு நன்கொடை வழங்கி உள்ளத்தளவில் உய்வு அடைவதாக இவர் கூறுகிறார். “மேடு பள்ளம் நிறைந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் கை மீறிப்போனால் இறைவனிடம் சரணாகதி அடைவேன். அந்தச் சரணாகதி மனப்போக்கு பல இடர்களைக் கடக்க எனக்கு உதவுகிறது,” என்று கலில் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
உணவகம்மரபுடைமைபோராட்டம்வெற்றி