சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் ஆசிய பசிபிக் கொள்கைப் பிரிவின் தலைவர் ஆறே மாதங்களில் பதவியிலிருந்து விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது பற்றி நன்கறிந்த அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
‘சாட்ஜிபிடி’யை உருவாக்கிய இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை இவ்வட்டாரத்தில் உள்ள ஒழுங்குமுறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வரும் வேளையில் அதன் முக்கிய அதிகாரி பதவியிலிருந்து விலகியுள்ளார்.
சாங்ஹியூன் லீ என்ற அந்த அதிகாரி சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
அவரது லிங்க்ட்இன் சுயவிவரத்தின்படி, கூகல் நிறுவனத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு கடந்த ஏப்ரல் மாதம் அவர் ஓப்பன்ஏஐ நிறுவனத்தில் சேர்ந்தார்.
அவர், பதவி விலகுவதற்கான காரணங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இது, ஒரு தனிப்பட்ட விவகாரமாக இருப்பதால் தகவலளித்த நபரும் தன்னுடைய பெயரை வெளியிடவில்லை.
அதே சமயத்தில் இது குறித்து ஓப்பன்ஏஐயும் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது.
சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த இந்த நிறுவனம், அண்மையில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இணையத் தளங்களை ஓப்பன்ஏஐயின் செயற்கை நுண்ணறிவு ஊடுருவியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்கக் கடுமையாக உழைப்பதாகவும், அவை நிகழ்ந்தால் உடனே நடவடிக்கை எடுப்பதாகவும் அது உறுதியளித்தது.
திரு லீ தனது பொறுப்பில் ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஓப்பன்ஏஐயின் பொதுக் கொள்கை, அரசாங்கத்துடனான தொடர்புகளை வழிநடத்தி வந்துள்ளார்.
அமெரிக்காவிலும் இணையப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் ஓப்பன்ஏஐ, ஆன்த்ரோபிக் மற்ற ஏஐ நிறுவனங்களின் தயாரிப்புகளை அந்நாட்டின் மத்திய வர்த்தக ஆணையம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
இதற்கிடையே ஓப்பன்ஏஐ நிறுவனம், உணர்வுபூர்வமான தகவல்களைக் கையாள்வது தொடர்பான விதிகளை மீறியதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கடந்த வாரம் மூன்று ஆய்வாளர்களைப் பணியிலிருந்து நீக்கியதாக வெள்ளிக்கிழமை எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
ஜாஸ்மின் வாங், டோமெக் கோர்பாக், மிகிட்டா பாலெஸ்னி ஆகியோர் அம்மூவர்.
பாதுகாப்பு தொடர்பான கவலைகளை எழுப்பியதற்கோ அல்லது கருத்துகளை வெளிப்படையாகப் பேசியதற்கோ அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படவில்லை என்று ஓப்பன்ஏஐ பின்னர் விளக்கமளித்தது.
