குறிப்பிட்ட சில மூலிகைத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பயனீட்டாளர்களைச் சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரித்துள்ளது.
அவற்றில், கடுமையான எதிர்மறை விளைவுகளையும் சிறுநீரகங்களுக்குப் பாதிப்பையும் ஏற்படுத்தும் மூன்று மூலப்பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக ஆணையம் புதன்கிழமையன்று (நவம்பர் 19) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
‘எச்டபிள்யூ பியூட்டி’(HW Beauty) நிறுவனத்தின் தயாரிப்புகள் அவை.
சோதனைகளின்போது, அவற்றில் இரு சக்திவாய்ந்த ‘ஸ்டெராய்டு’ எனும் ஊக்க மருந்தும் வீக்கத்தைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணியும் கலந்திருப்பது உறுதியானதாக ஆணையம் கூறியது.
இந்தத் தயாரிப்புகளை உட்கொண்ட சிலருக்குக் கடுமையான சிறுநீரகப் பாதிப்பு, ‘குஷிங்ஸ் சிண்ட்ரோம்’ எனும் ‘ஹார்மோன்’ சமநிலையின்மையால் ஏற்படும் கோளாறு ஆகியவை ஏற்பட்டது குறித்துத் தங்களுக்குப் புகார்கள் வந்ததாக ஆணையம் குறிப்பிட்டது.
மேலும், அவற்றை எடுத்துக்கொண்ட இருவர் நவம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்று வீடு திரும்பியதாகவும் அது சொன்னது.
‘எச்டபிள்யூ பியூட்டி’ தயாரிப்பை உட்கொண்டவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அது அறிவுறுத்தியது.

