சிங்போஸ்ட் நிறுவனமும் ஃபுல்லர்ட்டன் சுகாதாரப் பராமரிப்புக் குழுமமும் புதிய புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திடப்போவதாக வியாழக்கிழமை (மே 14) அறிவித்துள்ளன.
திடமான, ஒருங்கிணைந்த சுகாதாரப் பராமரிப்பு விநியோக முறையை இணைந்து உருவாக்குவதே அதன் நோக்கம்.
சிங்போஸ்ட் நிறுவனத்தின் நாடு தழுவிய, சமூக உள்கட்டமைப்பை, குறிப்பாக, அதன் விரிவான தளவாட, கிடங்குத் துறை ஆற்றல்களையும் ஃபுல்லர்ட்டன் ஹெல்த் நிறுவனத்தின் மருத்துவ, மருந்தக நிபுணத்துவத்தையும் பயன்படுத்தி, சுகாதாரப் பராமரிப்புச் சமூகத்திற்குச் சேவையாற்ற அந்தக் கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்புக்கும் மருந்து விநியோகத்திற்குமான புத்தாக்கத் தீர்வுகளை உருவாக்கும் திட்டங்கள் அதில் அடங்கும் என்று குழுமம் கூறியது.
“ஒவ்வொரு வீட்டிற்கும் மருந்துகளை விநியோகம் செய்யக்கூடிய எங்களது ஆற்றல், தீவு முழுவதும் வாடிக்கையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்ற ஃபுல்லர்ட்டன் ஹெல்த் நிறுவனத்தின் குறிக்கோளுக்கு ஆதரவாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்,” என்று சிங்போஸ்ட் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சோங் கூறினார்.
சிங்கப்பூர் 2026ஆம் ஆண்டில் மூப்படையும் சமூகத்தினரை அதிகம் கொண்டுள்ள நாடாக மாறிவருகிறது. அதனால், அது மீள்திறன்மிக்க மருத்துவ விநியோகத் தொடர் தேவைப்படும் நிலையில் உள்ளது. இந்த நேரத்தில், இங்குள்ள மக்கள்தொகையில் குறைந்தது 21 விழுக்காட்டினர், 65 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களாக இருப்பார்கள் என்று சிங்போஸ்ட் கூறியது.
இந்தப் பங்காளித்துவம், சிங்போஸ்ட் அதன் தளவாடத் துறை சார்ந்த சேவைகளைப் பன்முகப்படுத்தும் நடவடிக்கைகளை நோக்கிய ஒரு முக்கியப் படியாகக் கருதப்படுகிறது.

