சுகாதார அமைச்சின் ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ (Healthier SG) திட்டத்தில் 1.3 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிந்துகொண்டிருப்பதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) மாலை, தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மத்திய கல்லூரியில் தேசிய தினப் பேரணி உரையை ஆற்றியபோது அவர் அவ்வாறு கூறினார்.
இந்தத் திட்டம் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் திரு வோங் குறிப்பிட்டார்.
எடுத்துக்காட்டாக, அண்மையில் தாம் சந்தித்த 77 வயதுத் திருவாட்டி எடெலின் லிம் ‘ஹெல்தியர் எஸ்ஜி’ திட்டத்தில் பதிந்துகொண்டவர் என்றார் அவர்.
உடலியக்கத்துக்கு முக்கியத்துவம் தரும்படி மருத்துவர் அறிவுரை கூறியதால், திருவாட்டி லிம், ‘ஹெல்தி365’ செயலியையும் அதனுடன் வழங்கப்படும் கைக்கடிகாரத்தையும் பயன்படுத்தி அன்றாடம் தாம் எடுத்துவைக்கும் அடிகளைக் கணக்கிடுவதுடன் உடற்பயிற்சியும் செய்கிறார்.
பிரதமரிடம் தாம் அந்தச் செயலியைப் பயன்படுத்தும் விதத்தை எடுத்துக்கூறிய திருவாட்டி லிம், அன்றாடம் 7,000 அடிகள் எடுத்துவைக்கிறார். மேலும், மிதமான, கடினமான உடலுறுதி நடவடிக்கைகளில் (எம்விபிஏ) ஈடுபடுகிறார்.
அன்றாடம் துடிப்புடன் விளங்கும் நேரத்தில் இந்த நடவடிக்கைகளுக்கான சுகாதாரப் புள்ளிகளையும் அவர் பெறுகிறார்.
1,500 புள்ளிகள் சேர்ந்ததும் பேரங்காடிகள் அல்லது பொதுப் போக்குவரத்தில் பயன்படுத்தக்கூடிய $10 பற்றுச்சீட்டை அவர் பெறலாம்.
தொடர்புடைய செய்திகள்
இது சிறிய ஊக்கப்பரிசு என்றாலும் திருவாட்டி லிம் தொடர்ந்து இயங்குவதற்கு ஒரு காரணமாக விளங்குகிறது என்றார் பிரதமர்.
நமது சமூகம் விரைந்து மூப்படைந்து வருவதாகக் குறிப்பிட்ட திரு வோங், 2015ஆம் ஆண்டு சிங்கப்பூர் தன் பொன்விழா ஆண்டைக் (எஸ்ஜி50) கொண்டாடியபோது சிங்கப்பூரர்களில் ஏறத்தாழ 13 விழுக்காட்டினர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என்றார்.
சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டுநிறைவில் இந்த விகிதம் 20 விழுக்காட்டுக்கும் அதிகம் என்பதை அவர் சுட்டினார்.
மேலும், ஒரு நாட்டின் மக்கள்தொகையில் 21 விழுக்காட்டினர் அல்லது அதற்கு மேற்பட்டோர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக இருந்தால் அது ‘மிகவும் வயதானவர்கள்’ (Super-aged) நிறைந்த நாடு என்று ஐக்கிய நாட்டு நிறுவனத் தகவல் கூறுவதாகப் பிரதமர் சொன்னார்.
அடுத்த ஆண்டு சிங்கப்பூர் அந்த நிலையை எட்டக்கூடும் என்று கூறியதுடன் இன்னும் பத்தாண்டுகளில் சிங்கப்பூரில் 25 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் அத்தகைய முதியவர்களாக இருப்பர் என்றார் திரு வோங்.
சிங்கப்பூரர்கள் நீண்ட ஆயுள் கொண்டிருப்பது நற்செய்தி என்று கூறிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி உலாக்களின்போது நூறு வயது நிரம்பிய முதியவர்களைச் சந்திப்பதாகக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்குமுன் 100 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோரின் எண்ணிக்கை 400ஆக இருந்தது என்றும் இப்போது அது கிட்டத்தட்ட 1,500ஆகப் பதிவாகியிருக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.
தற்போது சராசரியாக 84 ஆண்டுகள் ஆயுளைக் கொண்டுள்ள சிங்கப்பூரர்கள் சராசரியாக 75 ஆண்டுகள் உடல்நலத்துடன் இருக்கின்றனர். பின்னர் சராசரியாக 10 ஆண்டுகள் நோய் அல்லது உடற்குறையால் பாதிக்கப்படுகின்றனர்.
நீண்டகாலம் உடல்நலத்துடன் வாழ்வதற்கு நோயைத் தொடக்கத்திலேயே கண்டறிதல், மேம்பட்ட சிகிச்சை போன்றவற்றில் தொழில்நுட்பம் உதவக்கூடும் என்றார் திரு வோங்.
இருப்பினும் சர்க்கரை, உப்பு ஆகியவற்றைக் குறைவாக உட்கொள்ளுதல், உடற்பயிற்சி, சமூகத்தில் தொடர்பு, மனரீதியாகத் துடிப்புடன் செயல்படுதல் போன்ற எளிய வழிமுறைகள் மூலம் உடல் நலத்தைப் பேண முடியும் என்பதை அவர் சுட்டினார்.
எனவே, நாட்டின் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பை நோய்க்கு சிகிச்சை அளித்தல் என்பதைவிட உடல்நலம் பேணுதல் என்ற இலக்குடன் செயல்படுத்துவது அவசியம் என்றார் திரு வோங்.
இதனைக் கருத்தில்கொண்டுதான் ‘ஹெல்தியர் எஸ்ஜி’ திட்டம் தொடங்கப்பட்டது என்றார் அவர்.
இதுவரை ‘ஹெல்தியர் எஸ்ஜி’ திட்டத்தில் இணையாதவர்களை இதில் இணைந்துகொள்ளும்படியும் தங்கள் குடும்ப மருத்துவர்களுடன் இணைந்து அவரவர் உடல்நலத்துக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளும்படியும் பிரதமர் ஊக்குவித்தார்.