ஆரோக்கியத்தை வாழ்க்கைமுறையாக ஊக்குவித்த விளையாட்டு விழா

3 mins read
2c44c0cd-d03e-45f6-aac6-1e4b01264229
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையையும் பிணைப்பையும் மேம்படுத்தும் நோக்கம் கொண்ட இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கும் வடமேற்கு வட்டார மேயர் அலெக்ஸ் யாமும் கலந்துகொண்டனர்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூர் 60வது ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மூன்றாவது முறையாக ‘ஹெல்த்தி லிவிங் ஃபெஸ்டிவல் @ நார்த்வெஸ்ட்’ விளையாட்டு விழா சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றத்தில் ஜூன் 1ஆம் தேதி நிறைவடைந்தது.

மூன்று நாள்கள் நடைபெற்ற இவ்விழாவில் இணையம்வழி உட்பட சுமார் 10,000 குடியிருப்பாளர்கள் பங்கேற்றனர்.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையையும் பிணைப்பையும் மேம்படுத்தும் நோக்கம் கொண்ட இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கும் வடமேற்கு வட்டார மேயர் அலெக்ஸ் யாமும் கலந்துகொண்டனர்.

அவர்களுடன் புதிய நீ சூன் அடித்தள ஆலோசகர்கள் சையது ஹருன் அல்ஹப்ஷி, லீ ஹுவேய் யிங், கோ ஹன்யான் மூவரும் விழாவில் இணைந்தனர்.

எல்லா சமூகங்களும் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க குறைந்தபட்ச முயற்சிகள் முக்கியம் என்று வலியுறுத்தினார் திரு ஓங்.

“மக்களை ஆதரிக்க எடுக்கப்படும் இதுபோன்ற முயற்சிகள் வழி தனிப்பட்ட முறையில் நமக்கும் உதவி கிடைக்கும். இது ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்தின் ஒரு கொள்கையும் ஆகும்,” என்றார் அவர்.

மூப்படையும் சமூகத்துக்கான ‘ஆரோக்கியமான எஸ்ஜி’ திட்டத்தையும் சுட்டிக்காட்டினார் திரு ஒங்.

“இந்தத் திட்டம் ஒவ்வொரு முதியோருக்கும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி தவிர எப்படி ஆரோக்கியத்தை ஒரு வாழ்க்கைமுறையாக மாற்றி எவ்வாறு கடைப்பிடிப்பது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்,” என்று தெரிவித்தார் திரு ஒங்.

விழாவின் ஒரு பகுதியாக மே 1ஆம் தேதியிலிருந்து ‘எஸ்ஜி60 ஒன்றுபட்டு மேலும் ஆரோக்கியமடைய’ எனும் இயக்கத்தில் வடமேற்கு குடியிருப்பாளர்களை மெதுநடை, மெதுவோட்டம், நீச்சல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியது. இந்த நடவடிக்கைகள் வழி வடமேற்கு வட்டார குடியிருப்பாளர்கள் ஒரு மாதத்தில் 60,000 கிலோமீட்டர் தூரத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும்.

இதன் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை கிடைத்த தகவல்படி, அவ்வட்டாரவாசிகள் ஒரு மாதத்தில் ஏறத்தாழ 89,000 கிலோமீட்டர் தூரம் நடந்துள்ளனர் என்று மேயர் அலெக்ஸ் யாம் தெரிவித்தார்.

இலக்கை நிறைவேற்றியதற்கு லீ மிங் கட்டுமான நிறுவனம், ‘எஸ்ஜி60 ஒன்றுபட்டு மேலும் ஆரோக்கியமடைய’ இயக்கத்துக்கு $60,000 வழங்கவுள்ளது.

“மூத்தோர் மட்டுமின்றி இளையர்களுக்கும் மேலும் பல திட்டங்களை அறிமுகப்படுத்த ஆயத்தமாகிறோம்,” என்றார் திரு யாம்.

அதுமட்டுமின்றி புதிய அடித்தள ஆலோசகர்கள் அளிக்கவிருக்கும் புதிய யோசனைகளை இணைத்து திட்டங்களை மேம்படுத்த மிக ஆவலாக உள்ளதாகத் தெரிவித்தார் அவர்.

மெதுவோட்டத்தில் ஆர்வம் இல்லாதபோதும் கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ‘நார்த் வெஸ்ட் மெதுவோட்ட சங்கத்தில் சேர்ந்தார் சில்லறை வர்த்தகத் துறையில் நடவடிக்கைகளைக் கவனிக்கும் நிர்வாகியான ரித்து ரிஷி, 47.

“ஒரு குழுவாக ஓடுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்ததால் நான் இந்தச் சங்கத்தில் சேர்ந்தேன்,” என்று பகிர்ந்தார் இரண்டு பதின்ம வயது இளையர்களுக்கு தாயாரான திருவாட்டி ரித்து.

வாரம் இரண்டு முறை சங்க உறுப்பினர்களுடன் ஓடினார் திருவாட்டி ரித்து. ஓராண்டுக்குமேல் தொடர்ந்து ஓடிய அவர் தம் முதல் நெடுந்தூர ஓட்டத்தில் பங்குபெற்ற அனுபவம் ஒரு தனிப்பட்ட வெற்றி என்றார்.

“உணவு, தண்ணீர், தூக்கம் நமக்கு எவ்வளவு முக்கியமானதோ அதேபோல உடற்பயிற்சி, நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றை வாழ்க்கைமுறையாக மேற்கொள்வது அவசியம்,” என்று வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்