இதய மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்க்கு மறுவாழ்வு

இதய மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்க்கு மறுவாழ்வு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Oct 2025 - 6:47 pm

2 mins read

இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட 54 வயது திரு ராஜமோகன் பக்கிரிசாமி, எட்டு மாதங்களுக்குப் பிறகுதான் சூடான சோயா பாலை முதன்முதலாக அருந்தினார்.

புத்துணர்வு தந்த இந்த இன்பம், கடந்த ஒன்பது ஆண்டுகளாக இவருக்கு மறுக்கப்பட்டிருந்தது. 

செயலிழந்த அவரது இதயத்திற்கு எல்விஏடி கருவி பொருத்தப்பட்ட நிலையில், அவர் தம் வாழ்க்கையைத் தாெடர்ந்தார்.

ஏப்ரல் 2016 முதல் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலில் இருந்தார் இந்த 54 வயதான முன்னாள் பாதுகாப்பு அதிகாரி.

“வைட்டமின் கே அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிட முடியவில்லை. நான் விரும்பிய அனைத்து சோயா உணவுப்பொருள்களையும் இதனால் தவிர்க்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது,” என்று கூறினார். 

அவருக்கான இதய மாற்று அறுவை சிகிச்சை, ஜனவரி 2025ல் செய்யப்பட்டது.

எல்விஏடி பயன்படுத்துவோருக்கான ரத்த மருந்துகளின் தாக்கத்தை வைட்டமின் கே குறைக்கிறது.

இப்போது இந்தக் கட்டுப்பாடு இல்லாத அவர், புதிய சுதந்திரத்தை அனுபவித்து வருகிறார். அவருக்குப் பிடித்தவிதத்தில் எந்தப் பக்கத்திலும் படுத்துத் தூங்குகிறார். 

திரு ராஜமோகன் அனுபவித்த இந்தச் சோதனைக்காலம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் தொற்றிலிருந்து ஆரம்பமானது. 

வைரஸ் தொற்று காரணமாக அவருக்கு இதயத் தசை பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது.

இதயச் செயலிழப்புக்கான மருந்துகள் அவருக்கு அளிக்கப்பட்டபோதும் அவரது நிலைமை மோசமடைந்தது, மூச்சுத் திணறலை அனுபவித்தார்.

உடல் முழுவதும் ரத்தத்தை உந்தச் செய்ய உதவும் வகையில் எல்விஏடி பொருத்துவதற்கான் திறந்த இதய அறுவை சிகிச்சை அவருக்குச் செய்யப்பட்டது.

வேலை கிடைப்பது கடினமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது தேறிவரும் திரு ராஜமோகன், முன்புபோல நீண்ட தனிப் பயணங்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். மீண்டும் ஒரு பாதுகாப்பு அதிகாரியாக வேலை தேட விரும்புவதாகவும் அவர் கூறினார்.

இதயத்தை தானம் செய்த அந்த அடையாளம் தெரியாத நபருக்குத் திரு ராஜமோகனும் அவருக்குத் தாயாரான திருவாட்டி சரோஜா பக்கிரிசாமிக்கும் தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர்.

“உண்மையிலேயே மிக்க நன்றி,” என்றார் 76 வயது திருவாட்டி சரோஜா.

குறிப்புச் சொற்கள்