புத்தாக்கம் நிறைந்த குடியிருப்பு வர்த்தகங்கள் அங் மோ கியோ சமூகத்தினரை சென்றடையும் வகையில் புதிய சமூக திட்டம் ஒன்று அறிமுகம் கண்டுள்ளது.
அத்திட்டம் அங் மோ கியோ நகர நடுவத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘ஸ்ப்ரவுட்@AMK’ இடத்தில், குடியிருப்புப் புத்தாக்கம், உருமாற்றத் திட்டத்தின் முதல் பங்கேற்பில் இடம்பெற்றுள்ள வர்த்தகங்களைக் கொண்டுள்ளது.
புத்தாக்க அம்சத்தை வெளிக்காட்டும் வகையில், தாங்கள் வேலை செய்யும் இடங்களை வழங்கும் ஒரு வன்பொருள் கடையிலிருந்து, வாடிக்கையாளர்களின் உணவுத் தயாரிப்பு நேரத்தைக் குறைப்பதற்காக ஏற்கெனவே மசாலா சேர்க்கப்பட்ட இறைச்சி வகைகளை வழங்கும் ஒரு கைவினைக் கலைஞர் முதல் இறைச்சிக் கடைவரை பல்வேறு துறைகளில் இருக்கும் குடியிருப்பு வர்த்தகங்கள் இந்தத் திட்டத்தில் அடங்கியுள்ளன.
குடியிருப்புப் புத்தாக்கம், உருமாற்றத் திட்டம், குடியிருப்பு வர்த்தகங்கள் புதிய, புத்தாக்கமான, யோசனைகளைச் சோதனை செய்வதற்கும், புதிய திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும் ஸ்ப்ரவுட்@AMKவில் ஏற்படுத்தப்பட்டுள்ள 12 மாதத் திட்டம் ஆகும்.
ஞாயிற்றுக்கிழமை (21 செப்டம்பர்) காலையில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஸ்ப்ரவுட்@AMK வளாகத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
12 மாதத்திற்குப் பிறகு அந்த வர்த்தகங்கள் குடியிருப்பு வட்டாரங்களில் சில்லறை வர்த்தக இடங்களுக்கு மாற வழியமைக்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் பங்கேற்கும் வர்த்தகங்கள் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி நடத்திய பயிலரங்குகள் வழியாகத் தங்கள் வணிக மாதிரி உத்திகள், சந்தை அணுகுமுறைகள், சமூக ஊடக சந்தைப்படுத்துதல் உத்திகளை மேம்படுத்த முடிந்தது.
ஒவ்வொரு வர்த்தகமும் ஒரு தொழில் வழிகாட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டுதல் அதிகாரிகள், வர்த்தகத்தின் புத்தாக்கப் பயணம் முழுவதும் வழிகாட்டி, புத்தாக்கத்துடனான தயாரிப்புகள், சேவை போன்றவற்றிற்கு ஆதரவு அளித்துள்ளனர்.
திட்டத்தின் முடிவிலும் ஸ்ப்ரவுட்@AMKல் தங்கள் குத்தகை காலம் நிறைவு செய்தபின்னரும், இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் வர்த்தகங்கள் வீவகவின் மேம்படுத்தப்பட்ட தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள வீவக கடை இடங்களுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
மேலும், அவர்கள் மூன்று ஆண்டு குத்தகையின் முதல் தவணையில் 10 விழுக்காடு வாடகை தள்ளுபடியையும் பெறுவார்கள்.
‘பேக்ஸ்டார்ட்டர்ஸ்’ எனப்படும் அளந்து கொடுக்கப்படும் துல்லியமான பேக்கிங் பொருள்கள், தனிப்பயன்பாட்டுக்குரிய பேக்கிங் கருவிகளை வழங்கும் ஸ்டுடியோ, இந்த வர்த்தகங்கள் பட்டியலில் அடங்கியுள்ளன.
“இந்த முயற்சி எங்களைப் போன்ற வர்த்தகங்களுக்குப் பெரும் ஆதரவு அளிக்கிறது. 12 மாதங்கள் முடிந்த பிறகு எங்களால் வாடிக்கையாளர்களின் வருகை, ஆதரவு எந்த அளவுக்கு இருக்கிறது எனத் தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயல்பட முடியும்,” என்றார் பேக்ஸ்டார்ட்டர்ஸ் நிறுவனர் கிரேகரி ஓங், 34.