வெப்பம், புகைமூட்டம்: 700 பேருக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் பராமரிப்பு உதவிகள்

வெப்பம், புகைமூட்டம்: 700 பேருக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் பராமரிப்பு உதவிகள்

2 mins read
30c24caa-e487-4434-94be-4c5a830ad30e
செப்டம்பர் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.45 மணியளவில் பெஞ்சமின் ஷியர்ஸ் பாலத்திலிருந்து மரினா சவுத் வட்டாரத்தில் காணப்பட்ட புகைமூட்டம். - படம்: எஸ்பிஎச் மீடியா
Google News Preferred Icon

சிங்கப்பூரில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் புகைமூட்டத்தின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவி தேவைப்படும் ஏறத்தாழ 700 பேர், வரவிருக்கும் நாள்களில் காற்று சுத்திகரிப்பான்கள், வியர்வை வழியாக வெளியேறும் நீர்ச்சத்தை ஈடுசெய்யும் ஐசோடானிக் பானம் உள்ளிட்ட பொருள்களைப் பெற உள்ளனர்.

மோசமடைந்துவரும் காற்றின் தரத்தால் எளிதில் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோர்க்கான உதவிகளை தான் அதிகரிக்கப்போவதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக, தங்களின் கண்காணிப்பில் தனிமையில் வசிக்கும் 70 வயதுக்கும் மேற்பட்ட 200 மூத்தோருக்குக் காற்று சுத்திகரிப்பான்கள், வெப்பம் மற்றும் புகைமூட்டத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான பொருள்களை அந்த மனிதநேய அமைப்பு வழங்கும்.

உடலில் நீர்ச்சத்து குறையாமல் வைத்திருக்க உதவும் பானங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களும் அந்த உதவித்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும்.

காற்று சுத்திகரிப்பான்களைத் தயக்கமின்றிப் பயன்படுத்தும் வகையில், சில மூத்தோருக்கு மூன்று மாதங்களுக்கான மின்சாரக் கட்டண உதவிகளும் வழங்கப்படும்.

“கடுமையான வெப்பம் மற்றும் புகைமூட்டத்தில் அதிக நேரம் இருப்பது மூத்தோருக்கு ஆபத்தானது என்பதால், இதுபோன்ற நடவடிக்கைகள் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்கும். அத்துடன் மோசமான சூழலில் அவர்கள் வெளியே செல்வதையும் தவிர்க்க அவை உதவும்,” என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் இல்லக் கண்காணிப்பு மற்றும் மூத்தோர் பராமரிப்புத் திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள மூத்தோருக்கு இதுபோன்ற உதவிகள் கிடைக்கும்.

200 மூத்தோர் தவிர, எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய மேலும் 500 பேருக்கு இளநீர், நீர்ச்சத்துக் குறைவைச் சரிக்கட்டும் பானங்கள், சமைத்த உணவு, சுகாதாரப் பொருள்கள் போன்றவை அடங்கிய பராமரிப்புத் தொகுப்புகளும் வழங்கப்பட உள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) காலை, சிங்கப்பூரின் 24 மணி நேர மாசுக் கட்டுப்பாட்டுக் குறியீடு 101ஐத் தாண்டியது.

2023 அக்டோபருக்குப் பிறகு காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது அதுவே முதன்முறை.

வெள்ளிக்கிழமை நிலவரத்தைத் தொடர்ந்து, தேசிய சுற்றுப்புற வாரியம் நாள்தோறும் அபாய எச்சரிக்கை அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டூழியர்கள் வெப்பம் மற்றும் புகைமூட்டத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளைக் கண்டறிவதற்கான பயிற்சியைப் பெறவுள்ளனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிவாரணம் வழங்கும் ஊழியர்களுக்குத் தேவையான என்95 முகக்கவசங்களும் வழங்கப்படவுள்ளன.

குறிப்புச் சொற்கள்