தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2030ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீவக பேட்டைகளிலும் வெப்பம் தணிக்கும் சாயம்

2 mins read
8fb11de6-1bf0-45d1-87a3-bf01897f7d53
வெப்பம் தணிக்கும் சாயத்தைப் பூசும் ஈராண்டு அறிமுகத் திட்டத்தை வீவகவும் தெம்பனிஸ் நகர மன்றமும் 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தின. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெப்பம் தணிக்கும் சாயத்தைப் பூசும் திட்டம் 2030ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டைகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.

இதுதொடர்பான அறிமுகத் திட்டம் தெம்பனிஸ் வட்டாரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

குடியிருப்புக் கட்டடத்துக்கு இந்த வகை சாயம் பூசுவதால் கட்டடத்துக்குள் பதிவாகும் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, அனைத்து வீவக குடியிருப்புக் கட்டடத்துக்கும் வெப்பம் தணிக்கும் சாயம் பூசப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்திட்டம் எல்லா நகர மன்றங்களுக்கும் வழங்கப்படும்.

இதற்கான செலவை அரசாங்கம் ஏற்கும்.

அனைத்து வீவக குடியிருப்புப் பேட்டைகளிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் அரசாங்கத்துக்குக் கூடுதலாக $60 மில்லியன் செலவு ஏற்படும் என்று தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 3) தெரிவித்தார்.

வெப்பம் தணிக்கும் சாயத்தைப் பூசும் ஈராண்டு அறிமுகத் திட்டத்தை வீவகவும் தெம்பனிஸ் நகர மன்றமும் 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தின.

அறிமுகத் திட்டத்தின்கீழ் தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள ஏறத்தாழ 130 வீவக குடியிருப்புக் கட்டடங்களுக்கு வெப்பம் தணிக்கும் சாயம் பூசப்பட்டது.

குடியிருப்புக் கட்டடங்களின் வெளிப்புறத்துக்கும் குடியிருப்புப் பேட்டையில் உள்ள நடைபாதைகளுக்கும் இவ்வகை சாயம் பூசப்பட்டது.

இதனால் குடியிருப்புப் பகுதியின் வெப்பநிலை குறைந்ததாகவும் அதன் விளைவாக வசிப்பிடத்தைக் குளிரூட்ட வழக்கத்தைவிட குறைவான எரிசக்தி தேவைப்பட்டதாகக் குடியிருப்பாளர்கள் கூறினர்.

எனவே, மின்சாரப் பயன்பாடு குறைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஒவ்வொரு வீவக குடியிருப்புக் கட்டடத்திலும் எரிசக்திப் பயன்பாட்டைக் கண்காணிக்க இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து வீவக குடியிருப்புக் கட்டடங்களில் அறிவார்ந்த மின்சாதனங்கள் பொருத்தப்படும் என்று வீவக தெரிவித்தது.

பிப்ரவரி 3ஆம் தேதியன்று பசுமை நகரங்கள் திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களில் இவை அடங்கும்.

இந்தப் பத்தாண்டுத் திட்டம் 2020ஆம் ஆண்டில் தொடங்கிவைக்கப்பட்டது.

வீவக நகரங்களைக் கூடுதல் நீடித்த நிலைத்தன்மை உடையவையாக்கவும் வாழ்வதற்கு ஏற்புடைய தரத்தை உயர்த்தவும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இத்திட்டம் எரிசக்தி பயன்பாட்டைக் குறைப்பதுடன் மழைநீரை மறுசுழற்சி செய்யும்.

உட்லண்ட்ஸ் டிரைவ் 71ல் பசுமை நகரங்கள் திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.

அன்று முதல் இன்று வரை அந்த வட்டாரத்தில் இத்திட்டம் நல்ல மேம்பாடு கண்டிருப்பதாகத் திரு டான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்