குழந்தை பெற்றுக்கொள்ள இரண்டே வாரங்கள் எஞ்சியிருந்த சூழலில், டிபிஎஸ் வங்கி ஊழியர் ஒருவர், 70 வயதைத் தாண்டிய மூதாட்டி மோசடியில் சிக்காமல் காப்பாற்றி இருக்கிறார்.
டிபிஎஸ் வங்கியின் செஞ்சுரி ஸ்குவேர் கிளையில் துணைச் சேவை மேலாளராகப் (assistant service manager) பணியாற்றிவரும் ஃபியோனிஸ் டியோ மூதாட்டியைக் காப்பாற்றியிக்கிறார்.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி, சம்பந்தப்பட்ட மூதாட்டி செஞ்சுரி ஸ்குவேர் டிபிஎஸ் வங்கிக்குச் சென்று 190,000 வெள்ளியைத் தனது கணக்கிலிருந்து எடுக்கவேண்டும் என்று கத்தியபடி கேட்டிருக்கிறார். அந்த மூதாட்டி பதற்றமாக இருந்தது தெரிந்தது.
அங்கிருந்த வாடிக்கையாளர்களின் முன்னிலையில் இச்சம்பவம் நடந்தது.
அந்த மூதாட்டி மோசடிக்கு ஆளாகியிருக்கக்கூடும் என்று சந்தேகித்ததால் வங்கி அவ்வாறு செய்ய மறுத்தது.
31 வயது டியோ, உதவிக்கரம் நீட்டினார். மூதாட்டி கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்துக்கு டியோவை வார்த்தைகளால் இழிவுபடுத்திக்கொண்டிருந்தார்.
“அமைதியாக இருக்குமாறு நினைவூட்டிக்கொண்டே இருந்தேன். அந்த மூதாட்டியை எல்லா பணத்தையும் எடுக்கவிட்டிருந்தால் அது சுலபமாக இருந்திருக்கும்.
“ஆனால், பரிவர்த்தனைகளைக் கையாள்வது மட்டும் எனது வேலை அல்ல. மக்களை அதிலும் குறிப்பாக பாதிப்புக்கு ஆளாகும் சாத்தியம் அதிகம் உள்ளவர்களைப் பாதுகாப்பதும்தான்,” என்று திருவாட்டி டியோ விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
சம்பந்தப்பட்ட மூதாட்டிக்கு அந்த நேரத்தில் மோசடிக்காரர்கள் கைப்பேசி வழியாக வங்கி ஊழியர்களிடம் என்ன சொல்வது என்று ‘வழிகாட்டப்பட்டது’. திருவாட்டி டியோ, அந்த மூதாட்டியை மறுநாள் திருப்பி வருமாறு கேட்டுக்கொண்டார்.
பிறகு திருவாட்டி டியோ வங்கியின் மோசடித் தடுப்புப் பிரிவிடமும் அதிகாரிகளிடமும் தெரியப்படுத்தினார். அவரும் காவல்துறையினரும், மூதாட்டி மோசடியில் சிக்காமல் பார்த்துக்கொண்டனர்.

