பருவமழையின் தீவிரத்தால் வெளிப்புற வர்த்தகங்களுக்குப் பெரும் பாதிப்பு

2 mins read
b743c008-b604-40e5-9df2-12849c5c00dc
பெருமழை காரணமாக கம்போங் கிளாம் ரமலான் சந்தையில் வாடிக்கையாளர்களின் வருகை குறைந்துள்ளது. - படம்: பெரித்தா ஹரியான்

கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து பெய்த மழையால், கம்போங் கிளாம் ரமலான் சந்தையில் உள்ள கடை உரிமையாளர்கள் உட்பட, சில வெளிப்புற வர்த்தக உரிமையாளர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

தங்கள் விற்பனை 50 விழுக்காடு வரை சரிந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஆயினும், இழப்புகளை ஈடுசெய்ய சிலர் இணைய விற்பனை மற்றும் புதுமையான உணவுப் பட்டியலை நாட முடிவு செய்துள்ளனர்.

கம்போங் கிளாம் சந்தையில், மார்ச் 25ஆம் தேதி சந்தை மூடப்படுவதற்கு முன்பு முடிந்தவரை விற்பனையை அதிகரிக்க முயல்வதாக கடை உரிமையாளர்கள் வியாழக்கிழமை (மார்ச் 20) சேனல் நியூஸ் ஏஷியாவிடம் தெரிவித்தனர்.

சகோதர நிறுவனங்களான ‘Teh-Ohhhh’ மற்றும் ‘Tebu’, சந்தையில் பல பானக் கடைகளை வைத்துள்ளன. விற்பனை ‘மிகவும் குறைந்து’, “நாங்கள் வழக்கமாகச் சம்பாதிக்கும் வருமானத்தில் பாதியாகி விட்டது,” என்று கடை உரிமையாளர் ‘மாய்’ கூறினார்.

“இந்தப் பருவத்துக்காக நாங்கள் பொருள்களை விற்று முடிப்பதற்கு முன்பு மக்கள் எங்களிடம் வந்து தங்களால் இயன்ற பொருள்களை வாங்குவார்கள் என்று நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

விநியோக முன்பதிவுகளை நம்பி தொடர்ந்து பணம் சம்பாதிக்கலாம் என்றும், வாடிக்கையாளர்களை இணையம் வழி பொருள்களை வாங்க ஊக்குவித்து வருவதாகவும் அவர் சொன்னார்.

‘ஹைக்கல்’ என்று தனது பெயரைக் குறிப்பிட்ட ‘ராம்லி பர்கர்’ கடை உரிமையாளர் ஒருவர், வாடிக்கையாளர்கள் பயன்படுத்த குடைகளைக் கூட வாங்கி வைத்திருப்பதாகக் கூறினார்.

“நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம். ஆனால் மக்கள் வர விரும்பவில்லை என்றால், ஒதுங்குவதற்கு இடம் இல்லை என்றால், எந்தப் பயனும் இல்லை,” என்று அவர் மேலும் விவரித்தார்.

விற்பனையாளர்களை மழையிலிருந்து பாதுகாக்க சந்தை நிர்வாகம் கூடுதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் கடைகளில் உணவு வாங்கும்போது அவர்களைப் பாதுகாக்கக்கூடிய மழை திரைச்சீலைகளும் அடங்கும். மழைநீரை வடிகால்களுக்குத் திருப்பிவிடவும், கடை உரிமையாளர்களின் உணவை உலர வைக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
ரமலான்சந்தைகம்போங் கிளாம்