மழையால் கெட்ட சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்

மழையால் கெட்ட சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்

2 mins read
93d6b73f-d813-4633-ab57-7f0af4263c99
கிளமெண்டியில் 'காட் ஆஃப் வெல்த்' சிலையைக் கடந்துசெல்லும் பொதுமக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மழை வந்து கெடுத்துவிட்டது. கடும் மழை காரணமாக பலரும் தங்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத் திட்டங்களைக் கைவிட்டுவிட்டனர் அல்லது மாற்றிக்கொண்டனர்.

கடும் மழை பெய்யும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 4.30 மணிக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இரண்டு நாள்களில் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பும் இருப்பதாக அது தெரிவித்திருந்தது.

திங்கட்கிழமை பிற்பகல், மாலையில் பல இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று அன்று முற்பகல் சுமார் 11.45 மணிக்குத் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

பருவநிலையும் கிட்டத்தட்ட கொண்டாட்டங்களைக் கெடுத்துவிட்டதாகப் பலரும் தெரிவித்தனர்.

கொவிட்-19 காரணமாக கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளில் முழு அளவிலான கொண்டாட்டங்கள் இடம்பெறவில்லை.

இந்த ஆண்டில் கட்டுப்பாடுகள் அகன்று மக்கள் மிகுந்த ஊக்கத்துடன் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு ஆயத்தமானார்கள்.

மழை காரணமாக போக்குவரத்துச் சேவைகளும் உணவு விநியோகச் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

திரு இயன் குணசேகரன் என்ற 26 வயது மாணவர் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் 25 பேருக்கு விருந்து அளிக்க திட்டமிட்டு கிராப் நிறுவனத்திடம் உணவைக் கொண்டுவந்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால், மழை காரணமாக ஊழியர்கள் போதிய அளவுக்கு வேலைக்கு வராததால் உணவு வந்து சேர 1.30 மணி நேரமாகலாம் என்று பதில் வந்தது. அதையடுத்து, அவரே பல்வேறு உணவு நிலையங்களுக்கும் சென்று உணவை வாங்கி வந்துவிருந்து அளித்தார்.

இரண்டு நாள்கள் நடக்க இருந்த கிட்டத்தட்ட 15 சிங்க நடன நிகழ்ச்சிகள் மழை காரணமாக பாதிக்கப்பட்டதாக யுனைடெட் டிராகன் லயன் டான்ஸ் என்ற நடனக்குழுவை நடத்திவரும் கென்னத் லீ என்பவர் தெரிவித்தார். இருந்தாலும், கலைஞர்களும் பார்வையாளர்களும் ஊக்கம் குறையாமல் இருந்ததாகவும் அவர் கூறினார்.

குடியிருப்புப் பேட்டைகளில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாட்டங்கள் திரும்பி இருப்பதால் எல்லாருமே மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார்.