தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீபாவளி வார இறுதியில் நிலவழிச் சோதனைச்சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்படலாம்

1 mins read
dc79c720-e6e9-4241-9c1b-4a8f332b59b4
செப்டம்பர் மாதம் 5ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 15ஆம் தேதி வரையிலான பள்ளி விடுமுறையின்போது உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச்சாவடிகள் வழியாக 5.8 மில்லியன் பேர் பயணம் செய்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தீபாவளி வார இறுதியில் (அக்டோபர் 17லிருந்து அக்டோபர் 20 வரை) சிங்கப்பூரில் உள்ள நிலவழிச் சோதனைச்சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்படுவதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் திங்கட்கிழமைன்று (அக்டோபர் 13) அறிக்கை வெளியிட்டது.

அந்த வார இறுதியில் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுகுச் செல்பவர்கள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என அது கூறியது.

எல்லையைக் கடப்பதற்கான காத்திருப்பு நேரம் கூடுதலாக இருப்பதற்கு மின்சிகரெட் கடத்தலைத் தடுக்க சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதும் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் மாதம் 5ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 15ஆம் தேதி வரையிலான பள்ளி விடுமுறையின்போது உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச்சாவடிகள் வழியாக 5.8 மில்லியன் பேர் பயணம் செய்தனர்.

செப்டம்பர் 5ஆம் தேதியன்று அவ்விரு சோதனைச்சாவடிகள் வழியாக 575,000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக ஆணையம் கூறியது.

எல்லையைக் கடந்து செல்ல கார்கள் மூன்று மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச்சாவடிகளை நோக்கிச் செல்வதற்கு முன்பு, அவ்விடங்களின் போக்குவரத்து நிலவரத்தைப் பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஒன்மோட்டரிங் இணையப்பக்கம் அல்லது புக்கிட் தீமா விரைவுச்சாலை மற்றும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு மற்றும் ஆலோசனைக் கட்டமைப்பு முறையைப் பயன்படுத்தி சோதனைச்சாவடிகளின் போக்குவரத்து நிலவரத்தை அறிந்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்