சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் திங்கட்கிழமை (மார்ச் 2) போக்குவரத்து நெரிசலை எதிர்நோக்கினர்.
மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் நிலவும் வேளையில் குடிநுழைவுச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டு இரண்டு நாளான நிலையில் போக்குவரத்து கூடியுள்ளது.
உட்லண்ட்ஸ் பாலத்தைக் கடக்கும் பயணிகள், போக்குவரத்து நெரிசல் கடுமையாய் இருப்பதாகக் கூறியுள்ளனர். போக்குவரத்துத் தடங்களில் மோட்டார்சைக்கிள்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் முதலியவை அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.
இருதரப்புக்கும் இடையில் இயங்கும் பேருந்துச் சேவைகளுக்கு நீண்ட வரிசைகளைக் காணமுடிவதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.
காலை 9.30 மணி நிலவரப்படி, பாலத்தைக் கடந்து சிங்கப்பூருக்குள் வருவதற்கு 105 நிமிடத்திற்கும் 160 நிமிடத்திற்கும் இடையில் ஆகலாம் என்று நிலச் சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நிலவரத்தைப் பார்வையிடும் ‘செக்பாயின்ட்.எஸ்ஜி’ செயலி முன்னுரைக்கிறது.
ஒரு வாரத்திற்கு முன்னர், அந்தப் பயணத்திற்கு 20 நிமிடத்திற்கும் குறைவாகவே ஆகியிருக்கும் என்று செயலி குறிப்பிட்டது.
‘பீட் த ஜேம்’ எனும் இன்னொரு செயலி, பயணத்திற்கு 103 நிமிடத்திலிருந்து 155 நிமிடம்வரை ஆகலாம் என்று கணிக்கிறது.
ஏறக்குறைய நான்கு வாரத்திற்கு முன்பு, அதே பயணத்திற்கு 37 நிமிடம் ஆகியிருக்கும் என்கிறது செயலி.
தொடர்புடைய செய்திகள்
துவாஸ் சோதனைச்சாவடியில் போக்குவரத்து சீராய் இருந்ததாகப் பயணிகள் குறிப்பிட்டனர்.
காலை 9.30 மணி நிலவரப்படி, இரண்டாம் பாலம் வழியாகச் சிங்கப்பூருக்குள் வருவதற்கு 25 முதல் 35 நிமிடம்வரை ஆகும் என்று ‘செக்பாயின்ட்.எஸ்ஜி’ செயலி குறிப்பிட்டது. அதற்கு 21 முதல் 32 நிமிடம்வரை ஆகும் என்று ‘பீட் த ஜேம்’ செயலி முன்னுரைத்தது.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் அதிகப் போக்குவரத்து எதிர்பார்க்கப்படுவதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் திங்கட்கிழமை (மார்ச் 2) காலை தெரிவித்தது.
நில, ஆகாய, கடல்வழிச் சோதனைச்சாவடிகளின் மூலம் சிங்கப்பூருக்குள் வரும் பயணிகளுக்கும் சரக்குகளுக்கும் பாதுகாப்புச் சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளதாக ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.

