செப்டம்பர் பள்ளி விடுமுறை ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. இவ்வேளையில் மலேசியாவிற்குச் செல்லும் தரைவழிச் சாலைகளில் வாகனமோட்டிகள் தாமதத்தையும் கூட்ட நெரிசலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் கூறியுள்ளது.
உட்லண்ட்ஸ், துவாஸ் ஆகிய இரு சோதனைச் சாவடிகளிலும் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையிலான நீண்ட தேசிய தின வார இறுதியில் குடிநுழைவு சோதனையைக் கடக்கப் பயணிகள் மூன்று மணிநேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது என ஆகஸ்ட் 26ஆம் தேதி (திங்கட்கிழமை) ஆணையம் வெளியிட்ட ஆலோசனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, பள்ளி விடுமுறை நாள்களிலும் குடிநுழைவு சோதனையைக் கடக்கக் காலதாமதம் ஏற்படலாம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
ஆகஸ்ட் 8ஆம் தேதி, இரு சோதனைச்சாவடிகளின் வழியாகவும் 540,000க்கும் மேற்பட்ட பேர் பயணம் செய்ததாக ஆணையம் குறிப்பிட்டது.
செப்டம்பர் பள்ளி விடுமுறை காலத்தில் சோதனைச்சாவடிகளைக் கடப்பவர்கள் கூடுதல் காத்திருப்பு நேரத்தைக் கணக்கிட்டு அதற்கேற்ப பயணத் திட்டத்தை அமைத்துக்கொள்ளும்படி ஆணையம் அறிவுறுத்தியது.
இதற்கு மாற்றாகப் பயணிகள் எல்லை தாண்டிய பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் அது கூறியது.
சோதனைச் சாவடிகளுக்குச் செல்வதற்கு முன், நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ‘ஒன் மோட்டாரிங்’ (One Motoring) இணையத்தளம் அல்லது புக்கிட் தீமா விரைவுச்சாலையிலும் ஆயர் ராஜா விரைவுச்சாலையிலும் அமைக்கப்பட்டுள்ள விரைவுச்சாலை கண்காணிப்பு ஆலோசனை அமைப்பு வழியாகப் போக்குவரத்து நிலைமையை வாகனமோட்டிகள் தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக ஊடக கணக்குகளின் மூலமும் Money FM 89.3, One FM 91.3, Kiss92, 96.3 Hao FM, UFM100.3 ஆகிய வானொலி ஒளிபரப்புகள் மூலமும் போக்குவரத்து நிலைமையை வாகனமோட்டிகள் அறியலாம்.