செப்டம்பர் மாதத்தில் வரும் பள்ளி விடுமுறை காலத்தில் உட்லண்ட்ஸ், துவாஸ் நிலவழி எல்லைகளில் மலேசியா செல்லும் பயணிகள், போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ளக்கூடும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நாள்களில் மலேசியா செல்வோர், கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்பதைக் கருத்தில்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக வார இறுதி நாள்களுக்கு இது பொருந்தும்.
தேசியத் தின வார இறுதியில் (ஆகஸ்ட் 8 முதல் 11 வரை) மலேசியா சென்ற பயணிகள் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம்வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கினர்.
அந்த மூன்று நாள்களில் மட்டும் ஏறத்தாழ 2 மில்லியன் பயணிகள் இரண்டு எல்லைச் சோதனைச் சாவடிகளை கடந்தனர்.
ஆகஸ்ட் 8ஆம் தேதி மட்டும் 558,000 பயணிகள் எல்லையைக் கடந்தனர்.
குடிநுழைவு அதிகாரிகளுடன் ஒத்துழைத்து போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்க நடந்துகொள்ளுமாறும் ஆணையம் பயணிகளைக் கேட்டுக்கொண்டது.
மேலும் மாற்று ஏற்பாடாகப் பயணிகள், மலேசியாவுக்குச் சென்று வரும் பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தலாம் என்று குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 1) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
நிலவழி எல்லைகளின்வழி பயணம் மேற்கொள்வதற்கு முன்பு வாகன ஓட்டிகள் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஒன் மோட்டோரிங் (One Motoring) இணையத்தளம் அல்லது புக்கிட் தீமா, அயர் ராஜா விரைவுச்சாலைகளில் நடப்பில் இருக்கும் விரைவுச்சாலை கண்காணிப்பு ஆலோசனை முறையை (Expressway Monitoring Advisory System) நாடலாம்.