எதிர்வரும் மே 8லிருந்து மே 13 வரை விசாக தின நீண்ட வார இறுதி விடுமுறை வருகிறது. அப்பொழுது உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகள் வழியாக மலேசியா செல்வோர் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சோதனைச்சாவடிகளைத் தாண்டிச் செல்லும் நேரமும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாண்டு விசாக தினம் மே 12ஆம் தேதி வருகிறது.
இது குறித்த திங்கட்கிழமை (மே 5) வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், மலேசியா செல்லும் பயணிகள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இரு நாடுகளுக்கு இடையே பயணம் மேற்கொள்ளும் பேருந்துகளில் பயணம் செல்ல குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதில், பேருந்து பயண நேரங்களை அறிய ஆணையத்தின் ‘மை டிரான்ஸ்போர்ட்.எஸ்ஜி’ என்ற இணையப்பக்கத்தை நாடலாம் என்றும் அது கூறுகிறது.
அதுபோல், வாகன ஓட்டுநர்களும் பயணம் மேற்கொள்ளும் முன் உட்லண்ட்ஸ், துவாஸ் இரு சோதனைச்சாவடிகளின் நிலவரத்தைக் கருத்தில் கொள்ளும்படியும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும், வாகன ஓட்டுநர்களும் பேருந்து வழியாகச் செல்லும் பயணிகளும் கடப்பிதழுக்குப் பதில் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி குடிநுழைவுச் சோதனையை தாண்டிச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தேர்தல் நாளான மே 3ஆம் தேதியில் உட்லண்ட்ஸ், துவாஸ் இரு சோதனைச்சாவடிகளிலும் போக்குவரத்து நெரிசலால் பயணிகள் 5 மணிநேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்ததாக ஆணையம் விளக்கியது.
அண்மையில் புனித வெள்ளி நீண்ட வார இறுதி நாள்களான ஏப்ரல் 17 முதல் 21 வரை 2.4 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் மேற்கூறிய இரண்டு சோதனைச்சாவடிகளைக் கடந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் வார இறுதி முதல் நாளில் மட்டும் 555,000க்கும் மேலானோர் கடந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

