அடுத்த 30 நாள்கள் சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கக்கூடும்.
உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் மே 21ஆம் தேதி முதல் ஜூன் 23ஆம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் மே 20ஆம் தேதி (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது.
மே 22ஆம் தேதி விசாக தினம், அதன் பின்னர் ஜூன் மாதம் பள்ளி விடுமுறை தொடங்குகிறது அதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கலாம் என்று ஆணையம் கூறியது.
அண்மையில் ஜோகூரில் நடந்த தாக்குதல் சம்பவம் காரணமாக சோதனைச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
அதனால் பயணிகள் கூடுதல் காத்திருப்பு நேரத்தைக் கருத்தில் கொள்ளும்படியும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி நடந்துகொள்வதுடன் சோதனைச்சாவடிகளில் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கும்படியும் பயணிகளை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
புனித வெள்ளியின் வாரயிறுதியில் ( மார்ச் 28 முதல் ஏப்ரல் 1) மட்டும் கிட்டத்தட்ட 2.3 மில்லியன் மக்கள் சோதனைச்சாவடிகள் வழி எல்லையைக் கடந்துள்ளனர். அதாவது நாள் ஒன்றுக்கு 455,000 பேர் எல்லையைக் கடந்துள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு புனித வெள்ளியின் வாரயிறுதியில் எல்லையைக் கடந்தவர்கள் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்ததாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.

