எதிர்வரும் பொது விடுமுறைகளின்போதும் ஜூன் பள்ளி விடுமுறைக்காலத்திலும் இரண்டு நிலச் சோதனைச்சாவடிகளின் வழியாக மலேசியாவுக்குச் செல்வோர், உச்ச நேரத்தில் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வாகனம் ஓட்டுவோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் கூறப்பட்டது.
பயணிகள், பயணத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்தது. உச்ச நேரத்தைத் தவிர்த்து அதிகாலையிலோ மாலை பின்னேரத்திலோ பயணம் செல்வதை அவர்கள் பரிசீலிக்க வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது. ஆணையம் அதன் தொடர்பில் வெள்ளிக்கிழமை (மே 22) அறிக்கையொன்றை வெளியிட்டது.
அண்மையில் மே தினத்தை ஒட்டிய நீண்ட வார இறுதியின்போது, அதாவது ஏப்ரல் 30ஆம் தேதிக்கும் இம்மாதம் (மே) 3ஆம் தேதிக்கும் இடையில், இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்டோர் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளைக் கடந்துசென்றனர். ஏப்ரல் 30ஆம் தேதி, ஆக அதிகமாக 580,000 பேர் அவற்றின் வழியாக வந்துசென்றனர். குடிநுழைவு, சோதனைச்சாவடிகளைக் கடக்க, கார்களில் சென்றவர்கள் மூன்று மணிநேரம் வரை காத்திருக்க நேரிட்டது.
இம்மாதம் 27ஆம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள்; 31ஆம் தேதி விசாக தினம்; ஜூன் முதல் தேதி பொது விடுமுறை. பள்ளி விடுமுறை, இம்மாதம் 30ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், அனைத்துச் சோதனைச்சாவடிகளிலும் பாதுகாப்புச் சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்தது. ஈரானியப் போரால் உலகளாவிய நிலையில் பாதுகாப்புச் சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனைக் கருத்தில்கொண்டே ஆணையத்தின் நடவடிக்கை வந்துள்ளது.
எதிர்வரும் விடுமுறைக் காலத்தில் குடிநுழைவு, சோதனைச்சாவடிகளை விரைந்து கடந்துசெல்ல ‘மைஐசிஏ’ செயலியில் உள்ள ‘கியூஆர்’ குறியீட்டைப் பயன்படுத்துமாறு பயணிகளை அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர். போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும் வாகனம் ஓட்டுவோருக்கு ஆலோசனை கூறப்படுகிறது. விதிமுறைகளை மீறியதற்காகவும் சாலைகளில் ஆபத்தான முறையில் செயல்பட்டதற்காகவும் மே தின வார இறுதியின்போது 19 வாகன ஓட்டுநர்கள் சோதனைச்சாவடிகள் அருகில் பிடிபட்டனர்.

