அனைத்துச் சமய மன்றத்தின் புதிய புரவலராக ஹெங் சுவீ கியட் பொறுப்பேற்கிறார்

அனைத்துச் சமய மன்றத்தின் புதிய புரவலராக ஹெங் சுவீ கியட் பொறுப்பேற்கிறார்

2 mins read
159f357f-5837-453b-9580-46dec51825ce
சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தை ஒட்டி, அனைத்துச் சமய மன்றம் ஏற்பாடு செய்த கொண்டாட்ட விருந்து நிகழ்ச்சியில் (இடமிருந்து) மன்றத்தின் துணைத் தலைவர் மர்டோக் அபெர்கெல், முன்னாள் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், துணைப் பிரதமர் கான் கிம் யோங், முன்னாள் பிரதமர் கோ சோக் டோங், அனைத்துச் சமய மன்றத் தலைவர் செங்குட்டுவன் கன்னியப்பன், துணைத் தலைவர் கே.இளங்கோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

முன்னாள் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், செப்டம்பர் 1 முதல் சிங்கப்பூர் அனைத்துச் சமய மன்றத்தின் (ஐஆர்ஓ) புதிய புரவலராகப் பொறுப்பேற்கவிருக்கிறார்.

2018 முதல் மன்றத்தின் புரவலராகப் பணியாற்றி வந்த ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங்கிடமிருந்து அப்பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வார்.

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) ஃபுல்லர்டன் ஹோட்டலில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்ட விருந்து நிகழ்ச்சியில் இதுகுறித்து அறிவிக்கப்பட்டது.

துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில்துறை அமைச்சருமான கான் கிம் யோங் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தமது புதிய பொறுப்பு குறித்துக் கருத்துரைத்த திரு ஹெங், பல்வேறு சமயங்களின் தலைவர்களையும் பின்பற்றுவோரையும் ஒன்றிணைத்து நம்பிக்கை, நட்பு, புரிதலை வளர்ப்பதில் அனைத்துச் சமய மன்றம் சிங்கப்பூரின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக விளங்குகிறது என்று கூறினார்.

புரவலர் பதவியை ஏற்கும் வேளையில், பல்லாண்டுகளாக இந்த மரபைப் பேணி வளர்த்தவர்களுக்குத் தமது ஆழ்ந்த மரியாதையைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

“நமது நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும் அது வருங்காலச் சந்ததியினருக்கு நம்பிக்கை மற்றும் ஊக்கத்தின் ஊற்றாகத் தொடர்வதை உறுதிசெய்யவும் ஒன்றிணைந்து செயல்பட உறுதியளிப்போம்,” என்று திரு ஹெங் கூறினார்.

1949ல் நிறுவப்பட்ட இந்த மன்றம், உரையாடல், கல்வி, சமூக ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் பரஸ்பர புரிதல், நட்பு, ஒத்துழைப்பை வளர்ப்பதற்காகப் பத்து சமயங்களின் பிரதிநிதிகளை ஒன்றிணைக்கிறது.

சிங்கப்பூரின் சமய நல்லிணக்கம் தற்செயலாக ஏற்படவில்லை என்றும் மாறாகப் பல்வேறு சமயச் சமூகங்களிடையே பல்லாண்டுகளாகக் கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கை, நட்பு, பரஸ்பர அர்ப்பணிப்பின் விளைவாகவே அது உருவானது என்றும் திரு கோ தமது உரையில் கூறினார்.

மன்றத் தலைவர் செங்குட்டுவன் கன்னியப்பன், புரவலராகத் திரு கோ வழங்கிய ஆதரவு குறித்துப் புகழுரை ஆற்றினார்.

“நோக்கத்தில் ஒன்றுபட்டு, சிங்கப்பூரின் நீடித்த நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் பிணைப்புகளைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம்,” என்றார் அவர்.

இன, சமய நல்லிணக்கத்திற்கான சிங்கப்பூரின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் கொண்டாடிய இந்நிகழ்ச்சியில், 300க்கும் மேற்பட்ட சமயத் தலைவர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள், சமூகப் பங்காளர்கள் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்