தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீவெங்கும் வீரர்கள்: அதிபர் தர்மன்

2 mins read
6e440480-06a6-4ab4-8e81-9ae839a195e4
தேசிய தின அணிவகுப்பு 2025ல் ஜீப் வாகனத்தில் பவனி வந்த அதிபர் தர்மன் சண்முகரத்னம் பார்வையாளர்களுக்கு தேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் முழுவதும் வீரர்கள் இருக்கிறார்கள்; அவர்களில் பலர் தேசிய தின அணிவகுப்பு 2025ல் அங்கம் வகித்தனர் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் பெருமையுடன் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு தர்மன் இவ்வாறு பதிவிட்டார். வீரர்களாகத் திகழும் சிலரின் கதைகளை அவர் அப்பதிவில் பகிர்ந்துகொண்டார்.

ஆல்ட்ரிக் ஜெய் கி‌ஷன், ஒரு காலத்தில் பாய்ஸ் டவுன் இல்லத்தில் இருந்தவர். இப்போது 31 வயதாகும் ஜெய், மூத்த இளம் சமூக சேவையாளராகப் பணியாற்றுவதாக அதிபர் தெரிவித்தார்.

இப்போது ஜெய், பதின்ம வயதினர் தவறான பாதையில் செல்லாமல் பார்த்துக்கொள்வதாக அதிபர் தர்மன் குறிப்பிட்டார். அதோடு, அவர் அனுபவம் வாய்ந்த மேற்கத்திய தாளவாத்திய இசைக் கருவிக் கலைஞராகவும் திகழ்கிறார்.

எப்படி மீண்டு வந்து பிறருக்கும் உதவிக்கரம் நீட்டலாம் என்பதை ஜெய் நமக்கு எடுத்துக்காட்டுவதாக திரு தர்மன் சுட்டினார்.

டிஸ்லெக்சியா குறைபாட்டை எதிர்கொண்டபோதும், வீசப்பட்ட துணிகளை ஆடை ஆபரணங்களாக மறுசுழற்சி செய்யும் நிறுவனத்தை மற்றவர்களுடன் சேர்ந்து நிறுவிய ஹர்யானி அனிசா, 24, தேசியப் பற்றுறுதியைச் சைகை மொழியில் மொழிபெயர்த்திருக்கும் ஒன்பது வயதாகவுள்ள அமெலியா டான், ‘டைகர் ஹோங்’ என்றழைக்கப்படும் ஓய்வுபெற்ற ராணுவ வீரரான கேப்டன் ஹோங் செங் மாக், சிங்கப்பூர் சுதந்திரம் அடைவதற்கு முன்னரே 17 வயதில் பெண்கள் துணைக் கடற்படையில் (ஸ்வான்ஸ்) சேர்ந்து முத்திரை பதித்த வீராங்கனை ஜூடி கோங் ஆகியோரின் கதைகளையும் திரு தர்மன் பகிர்ந்துகொண்டார்.

சிங்கப்பூர் செஞ்சிங்கங்கள் வான்குடை சாகச வீரர்களுக்கும் அவர் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.

“இவர்கள் அனைவரும் நம்மை ஆச்சரியத்தில் மட்டும் ஆழ்த்தவில்லை, தங்களை உதாரணங்களாக முன்னிருத்தி நம்மை நீமிர்ந்துப் பார்க்கச் செய்கின்றனர்,” என்று அதிபர் தர்மன் புகழாரம் சூட்டினார்.

“இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்புப் பாடல் கூறுவதுபோல் ஒவ்வொரு குரலுக்கும் ஒரு கதை உள்ளது; நாம் அனைவரும் வீரர்களாகத் திகழலாம்,” என்றார் அவர்.

“நாம் ஒன்றாக எழுதும் கதையில் நமக்கென இருக்கும் தனிப்பட்ட வழிகளில் வீரர்களாகத் திகழ்கிறோம். மாஜுலா சிங்கப்பூரா,” என்று ஊக்குவித்த திரு தர்மன், ஃபேஸ்புக்கில் தமது தேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்