சென்ற ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூர் ஊழியர்களிடையே மனநலன் ஆக ஆரோக்கியமான நிலையில் இருந்தது; அதற்குப் பிறகு ஓரளவு குறைவாகவே இருந்துவருகிறது.
இதன் தொடர்பிலான ஆக அண்மைய குறியீட்டின்படி சிங்கப்பூர் ஊழியர்களிடையே மனப்பதற்றம் (anxiety), தனிமை உணர்வு, மனச்சோர்வு ஆகியவை அதிகமாக இருக்கிறது.
சுகாதாரத் தொழில்நுட்ப நிறுவனமான டெலஸ் ஸெல்த் நடத்திய கருத்தாய்வில் இத்தகவல்கள் தெரியவந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதியிலிருந்து மார்ச் மாதம் ஒன்பதாம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் அந்நிறுவனம் 1,000 பேரைக் கொண்டு கருத்தாய்வை நடத்தியது.
மனநலக் குறியீடு
தேசிய அளவில் மனநலக் குறியீடு 62. இது, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து ஒரே அளவில் இருந்துவருகிறது.
அந்த ஒட்டுமொத்த குறியீட்டின்கீழ் ஆக்கத்திறனுக்கு 53, மனப்பதற்றத்துக்கு 53.4 ஆகிய குறியீடுகளும் பதிவாயின. இந்த இரு அம்சங்களிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவு குறியீடு குறைவாகப் பதிவானது.
அவற்றுக்கு அடுத்த நிலையில் இருப்பவை தனிமை உணர்வு, மனச்சோர்வு.
மாற்றங்களால் மனவுளைச்சல்
நிறுவனக் கட்டமைப்புகளில் போதுமான ஆதரவில்லாமல் மாற்றங்களை எதிர்நோக்கவேண்டிய சூழலில் ஏற்படும் மனவுளைச்சலை ஊழியர்கள் எதிர்நோக்குகின்றனர் என்பதை இப்புள்ளிவிவரங்கள் காட்டுவதாக வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர்.
ஊழியர்களின் மனநலக் குறியீடு குறையும்போது அவர்களின் ஆக்கத்திறன் குறியீடும் குறைவது தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
செயற்கை நுண்ணறிவு பயன்பாடு
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதைத் தங்கள் நிறுவனங்கள் ஊக்குவிப்பதில்லை என்று 61 விழுக்காட்டுப் பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். 31 விழுக்கட்டினர் நடுநிலையாக இருப்பவர்கள்.
செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை தாங்கள் ஊக்குவிக்கப்படவோ அந்த அம்சங்கள் தங்களுக்கு வழங்கப்படவோ இல்லை என்று ஐந்து விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
செயற்கை நுண்ணறிவைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக மூன்று விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தவேண்டாம் என்று கூறும் நிறுவனங்களின் ஊழியர்களிடையேதான் மனநலக் குறியீடு ஆகக் குறைவாக இருப்பது (52.2) தெரியவந்தது.
அதேவேளையில், செயற்கை நுண்ணறிவு தங்களுக்கு வழங்கப்படவோ இல்லை என்று கூறிய ஐந்து விழுக்காட்டினரிடையே மனநலக் குறியீடு ஆக அதிகமாகப் (64.3) பதிவானது.
காலத்துக்கு ஏற்றவாறு தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்வது குறித்து ஊழியரணி பலகாலமாகக் கவலை கொண்டுள்ளது இதற்குக் காரணம் என்பது வல்லுநர்களின் கருத்து.
அந்த ஐந்து விழுக்காட்டினருக்கு நெருக்குதல் இல்லாததே குறியீடு அதிகமாக இருப்பதற்கான காரணம் என்கின்றனர் அவர்கள்.

