உணவங்காடி நிலையக் கடைகளை அதிக வாடகைக்கு ஏலம் எடுப்பது வழக்கத்தில் இல்லாத ஒன்று என நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் தெரிவித்து உள்ளார்.
மரின் பரேட் மத்திய சந்தை மற்றம் உணவங்காடி நியைத்தில் காலியாக இருந்த கடை ஒன்றின் வாடகைக் குத்தகைக்காக ஜூலை மாதம் சாதனை அளவாக $10,158க்கு ஏலம் கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
உணவங்காடிக் கடைக்கான இரண்டாவது பெரிய ஏலத்தொகை அது. அத்துடன் ஆறு ஆண்டுகளில் அதுவே ஆக அதிகமான ஏலத்தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
மரின் பரேட் கடையை $10,680க்கு ஏலம் கேட்டு அளிக்கப்பட்ட விண்ணப்பம் மீட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக, $8,000க்கும் அதிகமாக ஏலம் கேட்டு மூன்று விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன.
இதனை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டிப் பேசிய இயோ சூ காங் தனித்தொகுதி உறுப்பினர் யிப் ஹான் வெங், உணவங்காடிக் கடைகளின் வாடகை உயரும் நிலவரத்தை இது உணர்த்துகிறதா, கடைகளில் விற்கப்படும் உணவு விலையில் அதிக ஏலத்தொகை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கேட்டிருந்தார்.
அந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த திரு கோ, பிரபலமான உணவங்காடி நிலையங்களில் குறிப்பிட்ட சில கடைகள் அதிகமான வாடகையை ஈர்க்கக்கூடியவை என்றார்.
இருப்பினும், வாடகைக்குக் கடையை ஏற்று நடத்த அதிகமான தொகைக்கு ஏலம் கேட்கப்படுவது வழக்கத்தில் இல்லாத ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.
“2023ஆம் ஆண்டு உணவங்காடி நிலைய உணவுக் கடைகள் ஏலத்திற்கு விடப்பட்ட இடைநிலைத் தொகை ஏறக்குறைய $1,800.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ஐந்தில் ஓர் உணவுக் கடை 500 வெள்ளிக்கோ அதற்கும் குறைவாகவோ ஏலத்திற்கு விடப்பட்டது,” என்றார் டாக்டர் கோ.
சிங்கப்பூர் முழுவதும் உள்ள எல்லா 120 உணவங்காடி நிலையங்களையும் தேசிய சுற்றுப்புற வாரியம் நிர்வகிக்கிறது. அவற்றில் 14,000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
2022ஆம் ஆண்டு நிலவரப்படி தேசிய சுற்றுப்புற வாரியம் நடத்திய ஆய்வில், கடைகளின் வாடகை அவற்றின் மொத்த செலவில் சராசரியாக 10 விழுக்காடு எனத் தெரியவந்ததாக டாக்டர் கோ கூறினார்.
உணவு தயாரிப்பதற்கான மூலப் பொருள்களுக்கான செலவு 56 விழுக்காடு, மனிதவளச் செலவு 20 விழுக்காடு என்றும் அவர் தெரிவித்தார்.

